உத்தரப் பிரதேசத்தில் ஆசிரமம் அமைத்து மிக பிரபலமான சாமியாராக உருவெடுத்தவர் ஜெய் குருதேவ். இவரது ஆதரவாளர் களுக்குள் பிரிவினை ஏற்பட்டதில் ராம் விருக் ஷா யாதவ் என்பவர் ஆசாத் பாரத் விதிக் வைசாரிக் கிராந்தி சத்யாகிரஹி என்ற தனி அமைப்பை தொடங்கினார். சுபாஷ் சந்திர போஸின் உண்மையான தொண்டர்கள் என கூறிக் கொள்ளும் அவர்கள் உள்ளூரில் ‘போஸ் சேனா’ என்று அழைக்கப்படுகின்றனர்.
ராம் விருக் ஷா யாதவ் உத்தர வின் பேரில் கடந்த 2014-ம் ஆண்டில் மதுரா ஜவஹர்பாத் பகுதியை ஆதரவாளர்கள் ஆக்கிர மித்து கடந்த 2 ஆண்டுகளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வியாழன் அன்று ஆக்கிரமிப்பாளர்களை போலீஸார் வெளியேற்ற முயன்ற போது கலவரம் வெடித்ததில் மாவட்ட எஸ்.பி உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.இந்நிலை யில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
மதுரா ஜவஹர் பாக் பகுதியில் 2 மாதங்க ளாக அடிப்படை வசதிகள் நிறுத்தப்பட்டதால் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் வெறும் கிச்சடி போன்ற உணவுகளை சமைத்து அவர்கள் உயிர் வாழ்ந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. மேலும் போராட்டம் எதற்காக நடந்து வருகிறது என்பது கூட தெரியாமல் பலர் இதில் பங்கேற்றிருப்பதும் அம்பலமாகியுள்ளது.
இது குறித்து தயா சங்கர் (87) என்பவர் கூறும்போது, ‘‘ராம் விருக் ஷா யாதவ் புதிய அமைப்பை தொடங்கி ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒருநாள் நிச்சயம் வருவார். அதுவரை இந்த ஜவஹர் பாக் பகுதியில் போராட்டத்தை தொடருங்கள்’ என தெரிவித்தார். அதை நம்பியே சுமார் 3 ஆயிரம் பேர் இங்கு கூடாரங்கள் அமைத்து தர்ணாவில் ஈடுபட்டு வந்தோம்’’ என்றார்.
ஜெய் குருதேவ் உயிரிழந்த பிறகு, சுதந்திர இந்தியாவை உருவாக்க வேண்டும், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பதவிகள் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘சந்தேஷ் யாத்ரா’ என்ற பெயரில் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து கடந்த 2014-ல் ராம் விருக் ஷா யாதவ் போராட்டம் தொடங்கினார். இதில் பங்கேற்ற 3 ஆயிரம் பேரும், குஜராத், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ஒடிசா ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்து வந்து கடைசியில் மதுராவில் உள்ள ஜவஹர் பாக் பகுதியில் கூடாரம் அமைத்தனர்.
அதன் பிறகு ஜவஹர் பாக் பூங்காவில் இருந்து யாரையும் வெளியேற விடாமல் ராம் யாதவ் தடுத்துள்ளார்.
இது குறித்து ஆக்ரா மண்டல ஐஜி துர்கா சரண் மிஸ்ரா கூறும்போது, ‘‘அந்த பூங்காவுக்குள் சிறிய அரசாங்கத்தையே அவர்கள் நடத்தி வந்துள்ளனர். தேவையான உணவுகளை வழங்கி வந்துள்ளனர். விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கியும், சித்ரவதை செய்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர். நீதிமன்றங்கள், சிறை வளாகங்களையும் உள்ளுக்குள் அமைத்துள்ளனர்’’ என்றார்.
மதுரா கலவரத்தின்போது ராம் விருக் ஷா யாதவ் மற்றும் மூத்த தலைவர்கள் தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
மாநில டிஜிபி ஜாவித் அகமது ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், கலவரத்தின்போதே ராம் விருக் ஷா யாதவ் உயிரி ழந்துவிட்டார். அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ராம் விருக் ஷா யாதவின் மகன் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது பெயர்கூட இதுவரை தெரியவில்லை.