மத சுதந்திரத்தையும் நம்பிக்கையையும் மதிக்கும் நாடு இந்தியா என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அறிவுக்கு புறம்பான பாகுபாடு காட்டும் நடவடிக்கைகள் மத சுதந்திரத்தில் சேர்ந்தது அல்ல. இந்த நடைமுறைகளைப் பாதுகாக்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் மத்தியில் பின்பற்றப்படும் தலாக் நடைமுறையை மதத்தின் அடிப்படை அங்கமாக கருத முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
தலாக் கூறி விவாகரத்து பெறும் நடைமுறையில் மத்திய அரசின் நிலைப்பாடு நியாயமானது. எந்த மத நடைமுறையாக இருந்தாலும் அது அரசமைப்புச் சட்ட நிலைப்பாட்டுக்கு ஒத்துப் போக வேண்டும்.
நரேந்திர மோடி அரசின் முன்னுரிமைகளில் முக்கிய கவனம் பெறுவது பாலின நியாயம், பாலின சமத்துவம், பாலின கண்ணியம் ஆகும்.
மத சுதந்திரம், வழிபாட்டு சுதந்திரத்தை மத்திய அரசு மதிக்கிறது. இவற்றுக்கு அடிப்படை உரிமைகளும் பாதுகாப்பு தருகிறது. ஆனால் அறிவுக்கு புறம்பான, பாகுபாடு காட்டும் நடைமுறைகள் மத சுதந்திரத்தில் வராது.
குறிப்பிட்ட மதத்தில் இருப்பதன் மூலம் சில பெண்கள் தமது உரிமைகளை இழக்க முடியாது. பாலின சமத்துவம் என்பது அரசமைப்புச் சட்டம் உருவானதிலிருந்தே அதில் இடம்பெற்றுள்ளது. முன்னேற்றமும் பெண்களுக்கு அதிகாரம் தருவதும் அரசின் முன்னுரிமைகளில் அடங்கியவை. தலாக் நடைமுறையை நீக்குவது தனி சட்டத்தை மீறுவதாகும் என சிலர் கூறுகின்றனர்.
இவ்வாறு அச்சம் தெரிவிப்பதால்தான் இந்த பிரச்சினையை எழுப்புகிறோம். ஈரான், மொராக்கோ, எகிப்து, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தலாக் நடைமுறையை சட்டம் மூலமாக ரத்து செய் துள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.