உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் நிறைவடைந்தன.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின் போது கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா, “கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்துவிட்டு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நால்வருக்கும் தண்டனை வழங்க வேண்டும்” எனக்கூறி, தனது வாதத்தை நிறைவு செய்தார்.
கர்நாடக அரசின் மற்றொரு மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, “கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதிட போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. எனவே அந்த தீர்ப்பை பரிசீலிக்காமல், அரசு தரப்பின் வாதத்தை பரிசீலித்து உச்ச நீதிமன்றம் முடிவை அறிவிக்க வேண்டும்'' என்றார்.
இதைத் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா தரப்பு
ஜெயலலிதா தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளதால், அவருக்கு பதிலாக மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆஜரானார். இவர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வர் தரப்பிலும் மறுப்பு வாதங்களை சுருக்கமாக முன்வைத்தார்.
கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான புதிய வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, “இவ்வழக்கில் இணைக்கப்பட்டுள்ள மெடோ அக்ரோ ஃபார்ம், லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் உள்ளிட்ட ஆறு தனியார் நிறுவனங்களுக்கு எதிராக வாதிட அனுமதிக்க வேண்டும்''என கோரினார்.
இதற்கு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் சேகர் நாப்டே ஆட்சேபம் தெரிவித்தார்.
அதற்கு கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, ''இரண்டு வழக்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. தனியார் நிறுவனங்கள் மீதான வழக்கை முறையாக புரிந்துகொண்டால், அது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பையே மாற்றிவிடும். எனவேதான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றமும், கர்நாடக உயர் நீதிமன்றமும் இரண்டு வழக்கையும் ஒன்றாகவே விசாரித்தன''என்றார்.
இதையடுத்து தனியார் நிறுவனங்கள் மீதான வழக்கை விசாரிக்க நீதிபதிகள் ஒப்புதல் அளித்தனர். தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுந்தரம் வெளிநாடு சென்றுள்ளதால், அவருக்கு பதிலாக புதியதாக வழக்கறிஞர் ஹரின் ராவல் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தனியார் நிறுவனங்களின் மீதான வழக்கு விசாரணை வரும் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கின் இறுதி வாதத் தின் போது கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, '' எனது 49 ஆண்டுகால வழக்கறிஞர் வாழ்க்கையில் இந்த வழக்கை மிக முக்கியமான வழக்காக கருது கிறேன். பல்வேறு முக்கிய அம்சங் களை சுருக்கமாக விவரித்து இருக்கிறேன். ஜெயலலிதா தரப்பு சேர்த்த சொத்து எல்லாமே சட்டத் துக்கு விரோதமானவை என்பதை ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறேன். எனது இறுதி வாதத்தை நிறைவு செய்யும் இந்த நிமிடத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாக உணர்கிறேன்''என்றார்.
அதற்கு நீதிபதிகள், “எங்கள் இருவரின் அனுபவத்தை சேர்த்தால் கூட 49 ஆண்டுகள் அனுபவம் வராது. மிகச் சிறப்பாக வாதிட்டுள்ளீர்கள். உங்களது அனுபவத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் வருமானத்தை விட அதிகமாக சொத்துக்குவிப்பது குற்றமாகுமா? ஆனால் அந்த வருமானம் சட்டத்துக்கு விரோத மாக வந்ததாக இருந்தால் மட்டுமே குற்றமாகும். இந்த சொத்துகளும், பணமும் ஜெயலலிதாவுக்கு சொந்தமானவை என்பதை அரசு தரப்பு நிரூபித்து இருக்கிறதா?''என்றனர்
அதற்கு ஆச்சார்யா, ''ஜெயலலிதா தான் சேர்த்துள்ள சொத்துக்கள் அனைத்துக்கும் வருமான வரி கட்டி, அதை சட்டத்துக்கு உட்பட்டு சேர்த்ததாக சித்தரித்துள்ளார்.
ஒரு சொத்துக்கு வருமான வரி கட்டினால் மட்டுமே அது நேர்மையாக சம்பாதித்த சொத்தாக மாறிவிடாது. எனவே வருமான வரி தீர்ப்பாயத்தின் முடிவுகளை, தீர்ப்பில் பரிசீலிக்கக் கூடாது''என்றார்.
இதைக்கேட்ட நீதிபதிகள், '' இவ்வழக்கை முடிக்க, இயன்ற வரையில் வேகமாக செயல்பட்ட உங்களுக்கு நன்றி'' என்றனர்.