இந்தியா

சிபிஐ-க்கு எதிரான தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது: லாலு பிரசாத் பேட்டி

செய்திப்பிரிவு

சிபிஐ அமைப்பு சட்டப்பூர்வமற்றது என்று குவாஹாட்டி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

ராஞ்சியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த அவர் கூறியதாவது:

சிபிஐ சட்டப்பூர்வமற்ற அமைப்பு என்று குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதிகள் இக்பால் அகமது அன்சாரி, இந்திரா ஷா ஆகியோர் அளித்த தீர்ப்பு குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டியது இந்த நேரத்தில் அவசியமாகியுள்ளது. கால்நடைத் தீவன வழக்கில் என்னை பலிகடாவாக்கிவிட்டார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் நிதிஷ் குமாரின் சதி வலையில் நான் சிக்கி விட்டேன். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் இதுகுறித்து விரிவாகப் பேச விரும்பவில்லை.

நான் நிரபராதி என்று தீர்ப்பு வந்த பிறகுதான் நாடாளுமன்றத்துக்குச் செல்வேன். தேர்தலில் போட்டியிட மட்டுமே எனக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. எனவே எனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் செய்வேன். அவர்களை நிச்சயமாக வெற்றி பெறச் செய்வேன் என்றார்.

2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதி இழப்பர் என்று கடந்த ஜூலை 10-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கால்நடைத் தீவன வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட லாலு பிரசாத்தின் எம்.பி. பதவி அண்மையில் பறிக்கப்பட்டது.

இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை நீர்த்துப் போக செய்யும் வகையில் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ராகுல் காந்தியின் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து லாலு பிரசாத்திடம் கேட்ட போது, இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை குறை சொல்ல முடியாது, ஊடகங்கள்தான் செய்திகளை திரித்து வெளியிட்டுவிட்டன என்று தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு முதலில் ஆதரவு தெரிவித்த பாஜக, பின்னர் திடீரென பின்வாங்கிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

SCROLL FOR NEXT