நீதிபதிகள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க தனி அமைப்பு ஏற்படுத்தக் கோரிய பெண் வழக்கறிஞர் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை ஜனவரி 15-ம் தேதி (புதன் கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இருப்பினும், வழக்கு விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நீதிபதி சுவதந்தர் குமார் குறித்து எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், சுவதந்தர் குமார் மீது இவ்வளவு காலம் தாழ்த்தி வழக்கு தொடர காரணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த வழக்கில் மத்திய அரசுக்கு உதவ வக்கீல்கள் நாரிமன், கே.கே. வேணுகோபால் ஆகியோரையும் நீதிமன்றம் நியமித்துள்ளது.
மனு விபரம்: ஓய்வு பெற்ற நீதிபதிகள் தொடர்பான புகாரை விசார ணைக்கு ஏற்க மாட்டோம் என்று கடந்த டிசம்பர் 5-ம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த அறிவிப்பு தவறானது என்று சுட்டிக் காட்டிய அந்த பெண் வழக்கறிஞர், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மீதான புகாரை விசாரிப்பதற்கென்று தனி அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஸ்வதந்தர் குமார் மறுப்பு:
தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவராக இருக்கும் ஸ்வதந்தர் குமார், இது ஒரு பொய் புகார். இதன் பின்னணியில் சதிச்செயல் இருப்ப தாக கருதுகிறேன்” என்று கூறியுள் ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாய அலுவலகத்துக்கு திங்கள்கிழமை ஸ்வதந்தர் குமார் வரவில்லை. அவருக்கு உடல் நலமில்லாததால், விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
பெண் வழக்கறிஞரின் புகாரின் அடிப்படையில் பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்வதந்தர் குமார் விலக வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.