தனித் தெலங்கானாவை எதிர்த்து டெல்லியில் உள்ள ஆந்திர பவன் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை போலீஸார் இன்று அப்புறப்படுத்தினர்.
கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அவரை, போலீஸார் முழு பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அப்போது, அவரது ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸை மறிக்க முயற்சி செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவதை உண்ணாவிரதப் பந்தலில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு, அவரது ஆதரவாளர்கள் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதனால், ஆந்திர பவனில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
முன்னதாக, ஆந்திர அரசின்கீழ் செயல்படும் ஆந்திர பவனின் ஆணையர் சார்பில் புதன்கிழமை காலை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அனுப்பப்பட்டது. அதில், நாயுடுவை வளாகத்திலிருந்து காலி செய்ய டெல்லி போலீசாருக்கு கட்டளையிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, டெல்லி போலீஸார் நாயுடுவை கட்டாயப்படுத்தி காலி செய்வதென முடிவு செய்தனர். இதற்காக, மெல்ல மெல்ல வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளின் இடைவெளிகளை குறைத்துக்கொண்டு வந்தனர்.
தனக்கு எதிராக நடத்தப்படும் நாயுடுவின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர உண்ணாவிரதம் தொடங்கிய முதல் நாளே மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. அதன் முதல் கட்டமாக, ஆந்திர பவனின் ஆணையர் அனுமதியின்றி நாயுடு அமர்ந்துள்ள வளாகத்தை காலி செய்யும்படி நோட்டீஸ் விடுத்தார்.
பிறகு புகாரை டெல்லி போலீசுக்கு அனுப்பியது ஆந்திர பவன். அதில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பவனில் இருக்கும் மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவறை ஆகிய அவசிய வசதிகள் அங்கு தங்குபவர்களுக்கு மட்டும் என கூறி நாயுடுவிற்கு தடை விதித்தது. இதை தொடர்ந்து ஜெனரேட்டர், நடமாடும் கழிவறை என வெளியிலிருந்து வசதிகள் செய்து கொண்டார் நாயுடு.
டெல்லியில் உண்ணாவிரதம் ஏன்?
நாயுடுவுக்கு 2 நாள் முன்னதாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரத் தலைநகரான ஹைதராபாத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். எனவே, ஆந்திரத்தில் உண்ணாவிரதம் இருந்தால் எடுபடாது என்பதால் டெல்லியில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார் நாயுடு.
இதனிடையே, தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர போலீஸார் புதன்கிழமை மருத்துவமனையில் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.