இந்தியா

ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் யார்?

செய்திப்பிரிவு

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளியே என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். அதே சமயம் ஊழல் குற்றங்களுக்காக அரசியல்வாதிகள் நீதிமன்றங்கள் மூலம் தண்டிக்கப்படுவது இது முதல்முறையல்ல.

ஏற்கெனவே பல்வேறு அரசியல்வாதிகளும் ஊழல் மற்றும் கொலை குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பட்டியல்:

ஜெகன்நாத் மிஸ்ரா (காங்கிரஸ்):

பிஹாரின் முன்னாள் முதல்வர். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 2013-ல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

லாலு பிரசாத் யாதவ் (ஆர்ஜேடி):

பிஹாரின் முன்னாள் முதல்வர். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர். இவரும் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு, பிணையில் விடுதலையானவர்.

சிபு சோரன் (ஜேஎம்எம்):

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர். கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முதல் மத்திய அமைச்சர். 2007-ல் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சுக்ராம் (காங்கிரஸ்):

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்.

முகமது சஹாபுதீன் (ஆர்ஜேடி):

பிஹாரின் சிவான் தொகுதி முன்னாள் எம்.பி. இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. தற்போது கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

நவ்ஜோத் சிங் சித்து (காங்கிரஸ்):

கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். பாஜக சார்பில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானவர். தற்போது காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகியுள்ளார். 2006-ல் இவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. கடைசியில் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

ரஷீத் மசூத் (காங்கிரஸ்):

ஊழல் வழக்குகளில் 2013-ல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். இதன்மூலம் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் அரசியல்வாதி.

SCROLL FOR NEXT