இந்தியா

உ.பி.யில் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பித்த 6700 பட்டதாரிகள்

ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யில் வாரணாசி முனிசிபல் நகராட்சியின் துப்புரவுப் பணியிடங்கள் 915-க்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 6700 பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது இம்மாநிலத்தின் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருப்பதை காட்டுகிறது.

இந்த 6700 பேரில் பொறியியல் உட்படப் பல்வேறு பிரிவுகளில் பட்டம் மற்றும் பட்டமேற்படிப்பு முடித்தவர்களாக உள்ளனர். இவர்களில் பெருநிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளுக்கு உரிய எம்பிஏ பட்டம் பெற்றவர்களும் துப்புறவுப்பணிக்காக விண்ணப்பித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் வாரணாசி முனிசிபல் நகராட்சியின் ஆணையரான ஸ்ரீஹரி பிரதாப் சஹாய் கூறுகையில், ‘இந்த விண்ணப்பங்களில் அதிகபட்சமாக பத்தாம் வகுப்பு பாஸ் செய்தவர்களும் அதை அடுத்து ப்ளஸ் டூ முடித்தவர்களும் உள்ளனர். இதன் அடுத்தபடியாக பட்டம் பெற்றவர்களும், பட்டமேற்படிப்பு முடித்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் விவரங்கள் கம்ப்யூட்டர்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்பணிக்கு பட்டதாரிகளும் விண்ணப்பித்திருந்தாலும் துப்புறவுப் பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனத் தெரிவித்தார்.

உபியின் தெய்வீக நகரமான வாரணாசியின் துப்புரவுப் பணிக்காக சுமார் 5000 பணியிடங்கள் உள்ளன. ஆனால், இதில் தற்போது 2600 துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். இதுபோல் உபியின் 75 மாவட்டங்களில் உள்ள துப்புரவுபணியின் காலி இடங்களை நிரப்ப முதல் அமைச்சர் அகிலேஷ்சிங் யாதவ் உத்தரவிட்டிருந்தார். கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட இதற்கான அறிவிக்கையில் 40,000 பணியிடங்களுக்கான இடம் நிரப்பட இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

இதற்கான உதவித்தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூபாய் 15,000 மட்டுமே. இதற்கு விண்ணப்பிக்கும் நபரிடம் சொந்தமாகத் தொடப்பம் மற்றும் மிதிவண்டி இருப்பது தகுதிகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிக்கு பட்டதாரிகளும் விண்ணப்பித்திருப்பதால் உபியில் வேலையில்லா திண்டாட்டநிலை மிகவும் அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

SCROLL FOR NEXT