தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்று, யமுனை கரையில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீடாக, வாழும் கலை அமைப்பு ரூ.4.75 கோடி செலுத்தியுள்ளது.
வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கடந்த மார்ச் 11 முதல் 13 வரை, டெல்லியில் யமுனை ஆற்றங்கரையில் 3 நாட்களுக்கு உலக கலாச்சார திருவிழா நடத்தினார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் யமுனையின் வெள்ளச் சமவெளி பகுதியில் பல்லுயிர் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் செய்தனர். இதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. என்றாலும் யமுனை கரையில் ஏற்படும் பல்லுயிர் சூழல் பாதிப்புக்கு இழப்பீடாக டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் முதல்கட்டமாக ரூ.5 கோடி செலுத்த கடந்த மே 9-ம் தேதி உத்தரவிட்டது. நிகழ்ச்சிக்கு பின், நிபுணர் குழுவின் ஆய்வின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை தீர்மானிக்கலாம் என்றும் கூறியது.
இந்நிலையில் யமுனை வெள்ளச் சமவெளியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய, மத்திய நீர்வளத் துறை செயலாளர் ஷஷி ஷேகர் தலைமையில் நிபுணர் குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த கடந்த 3-ம் தேதி அமைத்தது. நிகழ்ச்சி நடந்த இடத்தில் வரும் 10-ம் தேதிக்குள் ஆய்வு செய்து ஜூலை 4-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை அளிக்க இக்குழுவுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனிடையே இழப்பீட்டுத் தொகையாக வாழும் கலை அமைப்பு கடந்த மே 11-ம் தேதி ரூ. 25 லட்சம் மட்டுமே செலுத்தியது. எஞ்சிய தொகையை 4 வாரங்களில் செலுத்துவதாக உறுதி அளித்தது. இவ்வழக்கு கடந்த மாதம் 24-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, எஞ்சிய தொகையை டெபாசிட் செய்வதற்கு பதிலாக வங்கி உத்தரவாதம் அளிப்பதாக வாழும் கலை அமைப்பு கூறியது. அதை தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கவில்லை.
இதையடுத்து வாழும் கலை அமைப்பு விடுத்த அறிக்கையில், “தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த முடிவு நியாயமற்றது. இதன் தீர்ப்பை ஆராய்ந்து, தேவை ஏற்பட்டால் உச்ச நீதிமன்றம் செல்வோம். நாங்கள் எந்த விதிகளையும் மீறவில்லை. எந்தத் தவறும் செய்யவில்லை” என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 3-ம் தேதி டெல்லி வளர்ச்சி ஆணையத்திடம் வாழும் கலை அமைப்பு ரூ.4.75 கோடி செலுத்தியது. இத்தொகை வங்கி வரைவோலையாக செலுத்தப்பட்டுள்ளது.