‘‘மாநில அந்தஸ்து கோரும் மனுவுடன், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு தாக்கல் செய்யும் மனு விசாரிக்கப்படும்’’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசமாக உள்ளது. இதனால் போலீஸ், அரசு அதிகாரிகள் நியமனம், நிலம் தொடர்பான முக்கிய விஷயங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கி உத்தரவிட வேண்டும் என்று ஆம் ஆத்மி அரசு கோரியுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், டெல்லி ஆளுநருக்குள்ள அதிகாரம், அரசுக்குள்ள அதிகாரம் தொடர் பான வழக்கில், ஆளுநர்தான் யூனியன் பிரதேசத்தில் தலைமை நிர்வாகி. அவருடைய ஆலோசனைப்படிதான் அரசு செயல்பட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. பரபரப்பான சூழ்நிலையில், ஆம் ஆத்மி அரசின் சிவில் வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறும்போது, ‘‘டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும். எனவே, சிவில் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்’’ என்று தெரிவித் தார். அதை கேட்ட உச்ச நீதி மன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘டெல்லி அரசின் சிவில் வழக்கும், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் மேல்முறையீட்டு வழக்கும் ஒன்றாக விசாரிக்கப்படும்’’ என்று உத்தரவிட்டனர். மேலும், வழக்கை ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.