இந்தியா

ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீத மதுக்கடைகள் மூடப்படும் : காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் தேர்தல் அறிக்கை

செய்திப்பிரிவு

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன் வெளியிட்டார்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 4-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை டெல்லியில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் இதனை வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மன்மோகன் பேசும்போது, “மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதகமான விளைவை ஏற்படுத்தும். பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் இது முக்கியப் பிரச்சினையாக எழுப்பப்படும்” என்றார்.

பஞ்சாப் தேர்தலையொட்டி காங்கிரஸ் அளித்துள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:

போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடத்தலுக்கு துணை புரியும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் தண்டிக்கப்படுவார்கள். ஆட்சிக்கு வந்த 30 நாளில் போதைப் பொருள் முகவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீத மதுக்கடைகள் மூடப்படும்.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, பயிர்ச்சேத நிவாரணம், பயிர் காப்பீட்டுத் தொகை உயர்வு, கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு.

வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதுடன் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 1 லட்சம் டாக்ஸிகள் மற்றும் பிற வர்த்தக வாகனங்கள் வழங்கப்படும்.

விஐபி கலாச்சாரம் ஒழிக்கப்படும். அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பாதுகாப்பு 90 சதவீதம் குறைக்கப்படும். இவர்களின் கட்டாயமில்லா வெளிநாட்டுப் பயணங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படும்.

ரூ.5 லட்சத்துக்கு குறைவான ஆண்டு வருவாய் கொண்ட தலித், ஓபிசி, மற்றும் சிறுபான்மையின மக்களில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு அல்லது நிலம் வழங்கப்படும். ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் 15 சதவீதமாகவும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீதமாகவும் உயர்த்தப்படும். சிறுபான்மையினர் சுயவேலைவாய்ப்பு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT