மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘ஸ்மார்ட்’ நகரங்களின் புதிய பட்டியலில் தமிழகத்தில் திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக் குடி ஆகிய நகரங்கள் தேர்வாகி உள்ளன. நாடு முழுவதும் 30 நகரங்கள் புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 100 நகரங் களைத் தேர்வு செய்து ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றும் திட்டத்தை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி அறிவித்தது. இந்தப் பட்டியலில் ஏற்கெனவே 60 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக 30 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய பட்டியலில் கேரள தலை நகர் திருவனந்தபுரம், சத்தீஸ்கர் மாநிலத்தின் நயா ராய்பூர், குஜராத்தின் ராஜ்கோட், காந்திநகர், தாகோத் மற்றும் ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதி, பிஹாரின் பாட்னா, முஸாபர்பூர் உட்பட 30 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் தமிழகத்தில் இருந்து திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஜான்சி, அலகாபாத் மற்றும் அலிகார் ஆகிய 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
தெலங்கானாவில் கரீம்நகர், புதுச்சேரி, ஜம்மு காஷ்மீரில் நகர், ஜம்மு, மத்திய பிரதேசத்தில் சாகர், சத்னா, ஹரியாணாவில் கர்னால், கர்நாடகாவில் பெங்களூரு, இமாச்சல பிரதேசத்தில் சிம்லா, உத்தராகண்டில் டேராடூன், மகாராஷ்டிராவில் பிம்ப்ரி கிஞ்ச்வாட், சத்தீஸ்கரில் பிலாஸ்பூர், அருணாசல பிரதேசத்தில் பாசிகாத், மிசோராமில் அய்சால், சிக்கிமில் காங்டாக் ஆகிய நகரங்களும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
‘ஸ்மார்ட் சிட்டி’ பட்டியலில் சேர்ப்பதற்கான 40 நகரங்களுக்கான தேர்வில் 45 நகரங்கள் போட்டியிட்டன. விண்ணப்பத்தில் அவர்கள் குறிப்பிட்ட செயல் திட்டம் மற்றும் சாத்தியக்கூறுகள் அடிப்படையில் 30 நகரங்கள் மட்டுமே தேர்வாகின. இன்னும் தேவையான 10 நகரங்களுக்காக 20-க்கும் மேற்பட்ட நகரங்கள் விண்ணப்பித்துள்ளன.
இந்த 30 நகரங்களையும் ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்ற மொத்தம் ரூ.57,393 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.46,879 கோடியும், தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ள ரூ. 10,514 கோடியும் செலவிடப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள 90 நகரங்களுக்காக மொத்தம் ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 155 கோடி முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட நகரங் களுக்கு மத்திய அரசு தலா ரூ.500 கோடியை 5 ஆண்டுகால திட்ட அடிப்படையில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்வதற் காக வழங்குகிறது.