டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, 56 பேர் இடம் பெற்ற முதலாவது வேட்பாளர் பட்டியலை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி, அனைத்து அமைச்சர்கள் உள்பட எம்எல்ஏக்களாக இருக்கும் 42 பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.
முதல்வர் ஷீலா தீட்சித் புது டெல்லி தொகுதியிலிருந்து போட்டியிட உள்ளார்.ரஜொரி கார்டன் தொகுதி எம்.எல்.ஏ.வான தயாநந்த் சன்டேலாவுக்கு மட்டும் டிக்கெட் தரப்படவில்லை. அவர் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷவர்தன் மோங்கா போட்டியிடும் கிருஷண் நகர் தொகுதிக்கு வினோத் குமார் மோங்காவை நிறுத்தியுள்ளது காங்கிரஸ். இவர் பாஜகவின் முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
இந்த பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலர் மதுசூதன் மிஸ்த்ரி வெளியிட்டார். காந்தி நகர் தொகுதியில் வருவாய்த்துறை அமைச்சர் அரவிந்தர் சிங், லட்சுமி நகரில் சுகாதாரத்துறை அமைச்சர் ஏ.கே.வாலியா, பாலமரான் தொகுதியில் உணவுத்துறை அமைச்சர் ஹரூன் யூசுப் போட்டியிடுகின்றனர்.
பேரவைத் தலைவர் யோகானந்த் சாஸ்திரி மெஹ்ரோலி தொகுதியிலும் துணைத்தலைவர் அமரீஷ் சிங் கௌதம் கோண்டிலி (எஸ்சி) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.