உலகத்திலேயே மிகவும் கடினமான பணி எது தெரியுமா? பிரதமர் பணிதான் (அந்தப் பதவியில் இருக்கும் மன்மோகனிடம் தனியாக போய் கேளுங்கள், மனிதர் கதறி அழுதுவிடுவார்)
உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளத்தானோ என்னவோ, பிரதமர் பல முறை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 60 முறை அவர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். பல சுற்றுப் பயணங்களில் அவரது மனைவியும் உடன் சென்றிருக்கிறார். சில நாடுகளுக்கு அவரது மகள்களும் (சொந்த செலவில்) பயணம் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்குப் பயணம் போவதென்றால், அப்போது கோப்புகளைப் பார்க்க வேண்டியதில்லை. தலைமுடியை பியத்துக்கொள்கிற அளவுக்கு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.
இதை புரிந்துகொள்ளாமல்(!) எல்லோரும் மன்மோகன் சிங் உலக நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்வதை விமர்சனம் செய்து வருகின்றனர். (வெளிநாட்டுக்குச் சென்றாவது அவரை சற்று நிம்மதியாக இருக்க வடுங்களேன்!)
ஆனால், கடந்த முறை அமெரிக்காவுக்குச் சென்றபோது, அந்த நிம்மதியும் பறிபோனது. தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்றும் வகையில் கொண்டு வர உத்தேசித்திருந்த அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், அவர் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அந்தச் சட்டத்தைக் கண்டித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக பேட்டியளித்திருந்தார்.
அப்போது மன்மோகனின் மனநிலை எவ்வாறு இருந்தது என அவருக்கு மிகவும் நெருக்கமான உதவியாளர் ஒருவரை கேட்டபோது, “அவர் இதை எதிர்பார்க்கவில்லை. மிகவும் அதிர்ச்சியடைந்திருந்தார். 2 மணி நேரத்துக்கு அந்த அதிர்ச்சியிலிருந்து அவரால் மீள முடியவில்லை. அவரிடம் சோனியா காந்தி தொலைபேசியில் பேசிய பிறகுதான், மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பினார்” எனத் தெரிவித்தார்.
பிரதமர் சுற்றுப் பயணக் கதை இருக்கட்டும். ராகுல் காந்தி மாதம் ஒருமுறையாவது தனியார் விமானம் மூலம் வெளிநாட்டுக்குப் பயணம் போய்விடுகிறாராம். ஆனால், அவர் எங்கு செல்கிறார் என யாருக்கும் தெரியவில்லை.
இதைக் கேள்விப்பட்டவுடன், ராகுல் எங்கு செல்கிறார் என்பதை உடனடியாக கண்டுபிடித்துச் சொல்லும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதிவிட்டார்.
பாவம், பிரதமர் இதை எப்படி கண்டுபிடிக்கப் போகிறாரோ? தெரியவில்லை. இப்போது தெரிகிறதா பிரதமர் பணி எவ்வளவு கடினமானது என்று.