உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் நடந்த கலவரத்தை பற்றி நூல்கள் வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. இதனால், மீண்டும் உருவாகும் பதற்றத்தை தவிர்க்க அதை தடை செய்ய வேண்டும் என பொது அமைப்புகள் கோரியுள்ளன.
கவால் என்ற கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி இரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு முசாபர்நகரில் கலவரம் ஏற்பட்டது. இதில், அறுபதிற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் நாற்பதாயிரம் பேர். தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. இவர்கள் பல மாதங்களாக தங்கிய நிவாரண முகாம்கள் கடந்த டிசம்பரில் துவங்கிய கடும் குளிரால் காலியானது.
இந்நிலையில், மீரட்டின் விஸ்வ சம்வாத் கேந்திரா சார்பில் 'தங்கோ கா சஜ்' (கலவரத்தின் உண்மை) எனும் பெயரில் 64 பக்க நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், கலவரம் உருவான காரணம் திரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கலவரத்தை அடக்க தவறியதாக உபியை ஆளும் சமாஜ்வாடி கட்சி மீதும் கடுமையான புகார்கள் வைக்கப்பட்டுள்ளது. இதை, ஆர்.எஸ்.எஸ் (ராஷ்டிரிய சுயம் சேவக்) அமைப்பினர் முசாபர்நகர் பொதுமக்களிடம் விநியோகித்து வருகிறார்கள்.
டெல்லியின் ஜங்புறா பதிப்பகம் சார்பில் 'ஹின்சா சங்கீன், சாதீஷ் அவுர் ஷாந்தி' (கலவரத்தின் வரலாறு, சதி மற்றும் அமைதி) எனும் பெயரில் 64 பக்க நூல் வெளியிடப்பட்டுள்ளது. இது, பாதிக்கப்பட்டவர்களின் பார்வையில் கலவரம் எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது. இதை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பொதுமக்களிடம் விநியோகிக்கின்றனர். ஒரு பஞ்சாயத்து தலைவர் கலவரத்தில் வாள்களை விநியோகித்ததாகவும் அந்த நூல் புகார் கூறுகிறது.
மற்றொரு நூலான 'பைஸ்லா ஆப்கா' (முடிவு உங்களுடையது), கலவரம் தொடர்பாக வெளியான பத்திரிகைகளின் செய்திகளை தாங்கியுள்ளது. இந்த 94 பக்க நூலை, முசாபர்நகரை சேர்ந்த அட்வகேட் ஜெக்வீர்சிங் தொகுத்து கடந்த டிசம்பர் 17-ல் டெல்லியில் வெளியிட்டார்.
'தங்கோ பர் சியாசத்' (கலவரத்தில் அரசியல்) எனும் பெயரில் நாதிர் ராணா என்பவர் ரூபாய் ஐம்பது விலையில் ஒரு நூலை வெளியிட்டுள்ளார். இவர் முசாபர்நகர் கலவரத்தை குஜராத்தில் நடந்த கலவரத்துடன் இணைத்து விவரித்துள்ளார். இதை அங்குள்ள சில முஸ்லீம் அமைப்புகள் இலவசமாக விநியோகித்து வருகின்றனர்.
தற்போது, முசாபர்நகரில் அமைதி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வெளியாகி உள்ள இந்த நூல்களால் அமைதி திரும்பிய பகுதிகளில் மீண்டும் பதட்டம் உருவாகும் சூழல் நிலவுகிறது. எனவே, இந்த அனைத்து நூல்களையும் தடை விதித்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை எழத் துவங்கியுள்ளது.
இது குறித்து முசாபர்நகரை சேர்ந்த இலக்கிய ஆய்வாளரும், சமூக சேவகருமான டாக்டர்.பிரதீப் ஜெயின் 'தி இந்து'விடம் கூறுகையில், 'இதை தடுக்க ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தது போல், ஒரு துண்டு பிரசுரங்களையும் அரசின் முன் பதிவு செய்யும் முறை மீண்டும் அமுல்படுத்தப்பட வேண்டும். நடந்து முடிந்த கலவரத்தில் இந்து, முஸ்லீம் ஆதரவு கொண்ட அமைப்புகள் அரசியல் தேட முயலும் நூல்களை தடை செய்ய வேண்டும் என உபி அரசிடம் கோருவோம்.' எனத் தெரிவித்தார்.