கழிவறை வசதி கேட்ட மாணவிக்கு ஒரே நாளில் அதை கட்டி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் கர்நாடகா கிராம பஞ்சாயத்து அதிகாரிகள்.
21-ம் நூற்றாண்டிலும் இந்தியாவின் பல பகுதிகளில் கழிவறை வசதிகள் இல்லாமல் மக்கள் வாழும் சூழ்நிலைதான் நிலவுகிறது. மேலும் கழிவறை வசதி இல்லாமல் இரவு நேரங்களில் இயற்கை உபாதையில் இருந்து விடுபட திறந்தவெளி செல்லும் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் கொடுமை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் கழிவறை வசதி செய்து தர கேட்ட மாணவி ஒருவருக்கு ஒரே நாளில் கழிவறை கட்டிக் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் அவரைஆழ்த்தியுள்ளனர்.
குடியினால் மகளின் தேவை மறந்த தந்தை
கர்நாடகா மாநிலம் குக்கொடு கிராமத்தை சேர்ந்தவர் சுனிதா(16). சுனிதா தனது தந்தை ஷிஷி கவுடாவிடம் தனக்கும் தனது தாயாருக்கும் கழிவறை வசதி வேண்டும் என நீண்ட நாட்களாக கோரி வந்துள்ளார்.
ஆனால் சுனிதாவின் தந்தை குடிப் பழக்கத்துக்கு அடிமையானதால் சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் மதுவுக்கே செலவழித்து வந்துள்ளார்.
இந்நிலையில்தான் சுனிதா தனது கிராமத்து பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகியுள்ளார். பஞ்சாயத்து அதிகாரிகள் சுனிதாவிடம் சுவச் பாரத் திட்டத்தை அணுகுமாறு கூறியுள்ளனர். சுனிதா அதை தந்தையிடம் கூறியும் அவர் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.
முடிவில் கழிவறையை கட்ட கிராம பஞ்சாயத்து அதிகாரிகளே களத்தில் இறங்கினர்.
இது தொடர்பாக கிராம பஞ்சாயத்து அதிகாரி குருதத் கூறும்போது, "சுனிதாவின் தேவையை உணர்ந்து உடனடியாக அதை நாங்களே நிறைவேற்ற முடிவு செய்தோம். அவர் (சுனிதா) பள்ளிக்கு சென்று திரும்பும் முன் கழிவறை கட்டுவதே எங்கள் இலக்கு. அனைத்து கட்டுமானப் பொருட்களையும் கொண்டு சென்றோம். அக்கம்பக்கதினரும் எங்களுக்கு உதவினர். சுனிதா பள்ளியிலிருந்து வருவதற்குள் முக்கால் வாசி பணிகளை செய்து முடித்து விட்டோம்.
தனக்கென தனியாக ஒரு கழிவறையை கண்ட மகிழ்ச்சியில் சுனிதாவின் கண்ணிலிருந்து வந்த கண்ணீரை என்னால் என் வாழ் நாளில் மறக்க முடியாது" என்றார்.
கழிவறை வசதி செய்து கொடுத்ததுடன் சுனிதாவின் கல்விக்கென 12,000 ரூபாயை கிராம பஞ்சாயித்து நிர்வாகம் வழங்கியுள்ளது.