குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்படுவோம் என்ற அச்சம் காரணமாகவே மத்தியப் பிரதேசத்தின் போபாலில் போட்டியிட அத்வானி விரும்பியதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஒரு காலத்தில், பாஜகவின் பிரதமர் வேட்பாளராகக் கருதப்பட்ட அத்வானி தொடர்ந்து ஐந்தாவது முறையாக குஜராத்தின் காந்திநகர் தொகுதியிலிருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால், இந்த முறை தான் காந்திநகரில் போட்டியிட விரும்பவில்லை என்றும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபாலில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் கூறியதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கிடம், அவர் பேசினார்.
பாஜகவின் தேசிய தேர்தல் ஆலோசனைக் குழுவில் அத்வானி உள்ளார். ஆனால், புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இந்த முறையும் காந்திநகரில் போட்டியிடும்படி தன்னை வற்புறுத்தக் கூடாது என்பதற்காக அவர் அக்கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம், ‘தி இந்து’ செய்தியா ளரிடம் கூறுகையில், ‘பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியின் பெயர் அடிபடத் துவங்கியதில் இருந்தே அத்வானி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதன் காரணமாக, அத்வானிக்கு குஜராத்தில் செல்வாக்கு குறைந்து விட்டது. இதையே காரணமாக வைத்து அவரை தோற்கடிக்கவும் ஒரு திட்டம் இருப்பதாக குஜராத்தில் பேச்சு உள்ளது. எனவே, காந்திநகருக்கு பதிலாக போபாலில் போட்டியிட அவர் விரும்பியிருக்கலாம்” என்றனர்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த டிசம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அத்வானிக்கு மிகவும் பிடித்தவராக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இருந்து வருகிறார். சிவராஜ் சிங் சவுகான், பிரதமராவதற்கு தகுதியானவர் என்று அத்வானி ஒருமுறை குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது.
போபாலில் அத்வானி போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு வெற்றி உறுதி என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியதாகவும், அதன் காரணமாகவே அத்தொகுதியில் போட்டியிட அத்வானி ஆர்வம் காட்டியதாகவும் கூறப்படுகிறது.
சிவராஜுக்கு முன்பு அத்வானியிடம் மிகுந்த செல்வாக்கு உள்ளவராக நரேந்திர மோடி இருந்து வந்தார். அத்வானிக்கு போட்டியாக பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்ட பின்புதான், இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. மோடிக்கு எதிரான கருத்துகளை அத்வானி தெரிவித்து வந்தார்.
மோடியை பிரதமர் வேட்பாள ராக பாஜக அறிவிக்கவிருந்த சூழ்நிலையில், கட்சியை விட்டே விலகப்போவதாக அத்வானி கூறியிருந்தார். பின்னர், கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அவரை சமாதானப்படுத்தி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அத்வானியை சம்மதிக்க வைத்தனர்.
எனினும், தான் தோற்கடிக் கப்படுவோம் என்ற எண்ணம் காரணமாக காந்திநகர் தொகுதியிலிருந்து போபால் தொகுதிக்கு மாற அத்வானி விரும்பியதாகக் கூறப்படுகிறது.