இந்தியா

பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 4 ராணுவ வீரர்கள் பலி

செய்திப்பிரிவு

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் மேலும் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் ஒருவர் எதிர்பாராவிதமாக குண்டு வெடித்து பலியானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பதான்கோட் விமானப்படை தளத்தில் மேலும் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் என்கவுன்ட்டர் நீடித்தது. சில மணி நேர சண்டையில் 2 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படைத் தளத்தில் நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவினர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

சுமார் 13 மணி நேரம் நீடித்த சண்டையில் 4 தீவீரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படை தரப்பில் 3 வீரர்கள் பலியாகினர்.

இதுவரை 7 வீரர்கள் பலி

2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பதான்கோட் விமானப் படைத் தளம் 12 கி.மீட்டர் நீளம் கொண்டதாகும். அந்த வளாகம் முழுவதும் இன்று காலை முதல் அங்குலம் அங்குலமாக சோதனை செய்யப்பட்டது.

அப்போது சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு தீவிரவாதியின் உடலில் வெடிகுண்டுகள் கட்டப்பட்டிருந்தன. தேசிய கமாண்டோ படையைச் சேர்ந்த லெப்டினென்ட் கர்னல் நீரஞ்சன் குமார், அந்த குண்டுகளை செயலிழக்கச் செய்ய முயன்றார். எதிர்பாராதவிதமாக குண்டுவெடித்து அவர் பலியானார். மேலும் 4 வீரர்கள் காயமடைந்தனர்.

தீவிரவாதிகளுடனான முதல்நாள் சண்டையில் காயமடைந்த 12 வீரர்கள் பஞ்சாப் மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 3 பேர் இன்று உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக பாதுகாப்புப் படை தரப்பில் 7 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT