தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து காங் கிரஸ் தலைமையிடம் விளக்கம் அளிப்பதற்காக இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் செவ்வாய்க்கிழமை டெல்லி வந்தார்.
வீர பத்ர சிங் மத்திய உருக்குத் துறை அமைச்சராக இருந்தபோதும், இமாசலப் பிரதேச முதல்வராக இருந்தபோதும் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த திங்கள்கிழமை கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து வீரபத்ர சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இமாசலப் பிரதேச பாஜக இளைஞர் அணியினர் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வீர பத்ர சிங் ஏற்கெனவே 8 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் பாஜகவினர் அபாண்டமான பழிகளை சுமத்தி வருகின்றனர் என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமையிடம் விளக்கம் அளிப்பதற்காக அவர் செவ்வாய்க்கிழமை மாலை டெல்லி வந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து அவர் விளக்கம் அளிப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிபிஐ ஆய்வு
இதனிடையே தனியார் உருக்கு ஆலை நிர்வாகத்திடம் இருந்து வீர பத்ர சிங் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதிய அருண் ஜேட்லி அதன் நகலை சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.
2009 முதல் 2011 வரை வீரபத்ர சிங் மத்திய உருக்குத் துறை அமைச்சராக இருந்தபோது இந்த ஊழல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு இமாசலப் பிரதேச வர்த்தகக் கழகம் கேட்டுக் கொண்டதின்பேரில் இந்த விவகாரம் குறித்து சிபிஐ சார்பில் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அருண் ஜேட்லி எழுதிய கடிதம் குறித்து இப்போது ஆய்வு நடத்தி வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.