இந்தியா

பிரம்மோற்சவத்தில் சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில், தலைமை நிர்வாக அதிகாரி சாம்ப சிவ ராவ் மூவர்ண கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

திருமலைக்கு வரும் பக்தர் களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் முதல் வெள்ளிக்கிழமை யன்று ஆன்லைன் சேவை டிக்கெட்டுகள் விற்பனைக்கு விடப்படுகின்றன. இதன் மூலம் வெளி மாநில பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக விரைவில் திருமலையில் காம்ப்ளக்ஸ் கட்டப்படும். இந்த காம்பளக்ஸில் அவர்கள் ஓய்வெடுத்துவிட்டு, பின்னர் சுவாமியை தரிசிக்கலாம்.

அக்டோபர் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவத்தின் போது சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான பள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இறுதியில் சிறப்பாக பணியாற்றிய தேவஸ்தான ஊழியர்கள் 202 பேருக்கு 5 கிராம் வெள்ளி டாலருடன் கூடிய பதக்கமும், நற்சான்றிதழும் வழங்கி கவுர விக்கப்பட்டது.

SCROLL FOR NEXT