இந்தியா

கட்டாயமாகும் மலையாளம்: அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்

செய்திப்பிரிவு

கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கற்பித்தல் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அவசரச் சட்டத்துக்கு மாநில ஆளுநர் பி.சதாசிவம் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அலுவல் மொழி தொடர்பான உயர்நிலைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராயி விஜயன் புதிய சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகக் கூறினார்.

பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்த புதிய சட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் பொருந்தும். பள்ளிகள் எந்தமாதிரியான பாடத்திட்டத்தை பின்பற்றினாலும் மலையாளம் கற்பித்தல் கட்டாயம்.

சட்டத்தை மீறும் பள்ளிகளுக்கு மிகப்பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படும். மலையாளம் பேசுவதற்கு எதிராக பள்ளிகள் பிரச்சாரம் மேற்கொள்ளவோ அறிவிக்கைகள் வைக்கவோ கூடாது." என்றார்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு கெடுபிடி:

கேரள அரசு பிறப்பித்துள்ள மற்றொரு அவசரச் சட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நெறிமுறைப்படுத்த வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு கல்விக்கட்டணம் மற்றும் சேர்க்கை விதிமுறைகள் வரையறுக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அரசு அலுவலகங்களிலும் கட்டாயம்:

அரசு அலுவகலங்களில் மலையாளம் அலுவல் மொழியாக பயன்படுத்துவது வரும் மே.1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், இந்த சட்டம் பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், கூட்டுறவுத் துறை அமைப்புகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT