இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கு தொடர்பான விவகாரத்தில் தீர்வு காண அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி வருகிறோம்.
இந்த ஒரு விவகாரத்தால் இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்படுவதை இரு நாடுகளுமே விரும்பவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே, தனது பணிப்பெண் சங்கீதாவுக்கு உரிய ஊதியம் தரவில்லை என்ற புகாரின் பேரில் பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் அவரின் ஆடையை களைந்து போலீஸார் சோதனையிட்டனர்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, தேவயானி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், அதற்கு அமெரிக்கா மறுத்துவிட்டது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: "இந்தியா, அமெரிக்காவுக்கு இடையே இப்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் சரியான முடிவை எட்டும் எனக் கருதுகிறேன். அந்நாட்டுடன் நான் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறேன்.
கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி காரணமாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. அந்த நட்புறவை, இந்த ஒரு சம்பவத்தின் காரணமாக சீர்குலைக்க இரு நாடுகளுமே விரும்பவில்லை. இருநாடுகளுக்கு இடையேயான இந்த நட்புறவின் மதிப்பை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். தேவயானியை கைது செய்த சம்பவத்தை அடுத்து அமெரிக்காவுடனான எனது தூதரக ரீதியிலான தொடர்பில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது" என்றார்.
அமெரிக்காவின் பிடிவாதம்
இதற்கிடையே தேவயானிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. தேவயானியை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய நிரந்தர பிரதிநிதிகள் குழு அலுவலகத்துக்கு இந்திய அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் அவருக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு கிடைக்கும் என இந்திய அரசு கருதியது.
ஆனால், சம்பவம் நிகழ்ந்தபோது தேவயானிக்கு தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பு இல்லாததால், அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெறும். இப்போதைய புதிய பதவியின் மூலம் கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு, அந்த வழக்கிற்கு பொருந்தாது என அமெரிக்கா கூறிவிட்டது. ஆனால், இதற்கு முன்பு ஒருமுறை குற்றம் சாட்டப்பட்டவருக்கு தூதரக ரீதியிலான சட்டப் பாதுகாப்பின் கீழ் அமெரிக்கா விலக்கு அளித்திருந்தது இப்போது தெரியவந்துள்ளது.
1982-ம் ஆண்டு சவுதி அரேபிய இளவரசர் அப்துல் அஜிஸ், அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்தபோது, எகிப்திய பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி தன்னுடன் தங்கவைத்திருந்தார். இது தொடர்பான புகார் எழுந்தபோது அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்பட்டது. சம்பவம் நடந்த போது அவருக்கு தூதரக ரீதியிலான எந்தவிதமான சட்டப் பாதுகாப்பும் வழங்கப்படவில்லை. ஆனால், 3 வாரங்களுக்கு பின்பு அப்துல் அஜிஸுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் தூதரக ரீதியான முழு சட்டப் பாதுகாப்பை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வழங்கியது. அவ்வாறு இருக்கும்போது, இப்போது தேவயானிக்கு முழுமையான சட்டப் பாதுகாப்பு அளிக்க மறுப்பது ஏன் என்று அரசியல் நோக்கர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.