புத்தாண்டின் தீர்மானமாக, ‘ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள்’ என்ற பிரச்சாரத்தை முஸ்லிம் அமைப்புகள் தொடங்கி உள்ளன.
சிரியாவில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இந்திய இளைஞர்கள் சிலரும் சேர்ந்துள்ளதாக தகவல் கள் வெளிவந்துள்ளன. மேலும் இணையதளங்களில் ஆள் சேர்க்க மூளை சலவை செய்வதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், புத்தாண்டின் புதிய தீர்மான மாக மும்பையைச் சேர்ந்த அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ‘சஹாஸ் பவுண்டேஷன்’ மற்றும் ‘உருது மார்க்கஸ்’ ஆகியவை இணைந்து புதிய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.
‘ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக முஸ்லிம்கள்’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தின்போது, ஐஎஸ் அமைப்பில் முஸ்லிம் இளைஞர்கள் சேர்வதைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் இணையதளம் மூலம் ஐஎஸ் அமைப்பில் சேர முயற்சிப்பதாக சந்தேகப்படும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கும்.
தெற்கு மும்பை பெஹண்டி பஜார் அருகில் உள்ள இமாம்வாடா முனிசிபல் உருது பள்ளியில் இந்த பிரச்சாரம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி வைக் கப்பட்டது. இதுகுறித்து சஹாஸ் பவுண்டேஷன் தலைவரும் பிரச்சாரத்தை தொடங்கிய முக்கிய காரண கர்த்தாவுமான சயத் பர்கான் கூறும்போது, “இந்த புத்தாண்டில் ஐஎஸ் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவதை விட வேறு சிறந்த தீர்மானம் எதுவும் இருக்க முடியாது. ஐஎஸ் அமைப்பின் பொய்யான வார்த்தைகளில் மயங்கி விடாதீர்கள் என்று முஸ்லிம் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்” என்றார்.
உருது மார்க்கஸ் அமைப்பின் தலைவர் ஜுபைர் ஆஸ்மி கூறும்போது, “ஐஎஸ் தீவிரவாதிகள் முக்கிய இணையதளம் மூலம்தான் ஆட்களை தேடுகின்றனர். இணைய தளத்தை பயன்படுத்தும் போது இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம். இஸ்லாம் என்ற பெயரில் அப்பாவி மக்களை படுகொலை செய்யத் தூண்டுவதை நம்ப வேண்டாம். ஐஎஸ் தீவிரவாதிகளின் செயல்கள் இஸ்லாத்துக்கு எதிரானது, மனிதநேயமற்றது என்று பிரச்சாரம் செய்ய தொடங்கி உள்ளோம்” என்றார்.