திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் அபிதேயக அபிஷேகம் நேற்று தொடங்கியது. இதையொட்டி உற்சவரான மலையப்ப சுவாமி, வைர கவச அலங்காரத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை அபிதேயக அபிஷேகம் நடத்துவது வழக்கம். தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த உற்சவம் நடைபெறும். நிகழாண்டு அபிதேயக அபிஷேகம் நேற்று தொடங்கியது. இதையொட்டி உற்சவரான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சம்பங்கி பிரகாரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் ஹோம பூஜைகளும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து உற்சவருக்கு வைர கவச அலங்காரம் செய்யப்பட்டு, வீதியுலா நடைபெற்றது. மாட வீதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பவனி வந்த மலையப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியின் 2- நாளான இன்று, உற்சவர் முத்து அங்கி அலங்காரத்திலும், நாளை தங்க கவச அலங்காரத்திலும் பவனி வந்து அருள் பாலிக்க உள்ளார். இந்த அபிதேயக அபிஷேகத்தையொட்டி, ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.