தமிழக அரசுக்கு மருத்துவ சேவைக்கான சிறப்பு விருது வெள்ளிக்கிழமை டெல்லியில் வழங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அளித்த விருதை தமிழக அரசு சார்பில் அதன் தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளர் நா.முருகானந்தம் பெற்றுக் கொண்டார்.
ஏப்ரல் 7-ம் தேதி அன்று உலக சுகாதர தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இதற்காக, இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் (TELEMEDICINE SOCIETY OF INDIA) சார்பில் டெல்லியின் விக்யான் பவனில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சிறந்த மருத்துவ சேவைகளுக்கான சிறப்பு விருதை தமிழக அரசுக்கு வழங்கினார்.
நாடாளுமன்ற மக்களவை துணைத்தலைவர் டாக்டர் மு.தம்பிதுரையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இங்கு வழங்கப்பட்ட விருதினை தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையாளர்.நா.முருகானந்தம் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ரத்து செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.