இந்தியா

மரபை எதிர்க்கும் அரசியல் தலைமை

சேகர் குப்தா

அரசியல்வாதிகள், அரசியல் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக அண்ணா ஹசாரே தலைமையில் புது இயக்கம் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்டது. இந்திய சமூகத்திலும் அரசியல் களத்திலும், பொருளாதாரத்திலும் உள்ள குறைகள் அனைத்துக்குமே காரணம் அரசியலும் அரசியல்வாதிகளும்தான் என்று அந்த இயக்கம் பழியை அவர்கள் மீது தூக்கிப் போட்டது. அரசியலுக்கு எதிராக மேற்கொள்ளும் இயக்கமாக, ஊழல் எதிர்ப்பு இயக்கம் உருவம் பெற்றது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவர், அதன் அனுதாபிகள், இடதுசாரி சிந்தனையாளர்கள் என்று பலதரப்பட்டவர்களும் அதனை ஆதரித்தனர். பாபா ராம்தேவ், தரைப்படைத் தலைமை தளபதியாக இருந்த வி.கே.சிங், கிரண் பேடி, பிரசாந்த் பூஷண், ஷபானா ஆஸ்மி, ஓம்புரி, ஆமிர்கான் போன்றவர்கள் அதை ஆதரித்தனர். அண்ணா ஹசாரேயுடன் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து அந்த இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டனர். தேர்தல் நடைமுறை என்பது ஊழல்பேர்வழிகளுக்கானதாக இருந்தது. ஒரு மதுபான புட்டி அல்லது 500 ரூபாய்க்கு வாக்குகளை ‘வாங்கும் பழக்கம்’ ஏற்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள், கொள்ளை - திருட்டு வழக்குகள் பதிவாகியிருந்தன. 125 கோடி மக்களின் தலைவிதியை வெறும் 800 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிப்பதா என்ற கோபமும் இந்த இயக்கத்தாரிடையே மூண்டது.

அண்ணா ஹசாரே, காந்திஜியைப் போல நடந்துகொண்டபோது அவரை காந்தியவாதியாகவே உதிரி சோஷலிஸ்டுகளும் தொலைக்காட்சி நெறியாளர்களும் வர்ணித்தனர். காலவரம்பற்ற உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை காந்தியிடமிருந்து அவர் இரவல் வாங்கினார். ஆனால் அவர் சார்ந்த குறியீடு காந்தியத் தன்மை கொண்டதல்ல. பகத் சிங், சுபாஷ் சந்திர போஸ், மகாராணா பிரதாப், சில சந்தர்ப்பங்களில் சமீபத்திய பாலிவுட் திரைப்படங்கள் என்று கலந்துகட்டி இருந்தது.

ஹசாரேவின் இயக்கம் இப்போது எங்கே என்று பார்ப்போம். அவரே இப்போது எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்துக்கே போய்விட்டார். ராலேகான் சித்திகியில் கனவுலகப் பூதங்களுக்கு எதிராகப் போரிட்டு வருகிறார். மோடியின் ஏதாவது ஒரு செயலைப் பாராட்டிப் பேசும்போதோ, அர்விந்த் கேஜ்ரிவாலைக் கண்டிக்கும்போதோ ஊடகங்கள் அவரைப்பற்றி ஓரிரு வரிகளில் தகவல்களைத் தெரிவிக்கின்றன. ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் அவரோடு நெருக்கமாக இருந்த ஒருவர்கூட இப்போது உடன் இல்லை. கிரண் பேடி, மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் (இதுவரை ஒரு தேர்தலிலும் போட்டியிடாதவர்!), கோபால் ராய், செய்தித் தொடர்பாளர் மீரா சன்யால், இடதுசாரி செயல்பாட்டாளர் மேதா பட்கர் என்ற எல்லோரும் இப்போது தேர்தல் அரசியலில் இறங்கிவிட்டனர். ஹசாரேயின் இயக்கத்துடைய அணுகுமுறை, செயல்முறை, உள்நோக்கம் போன்றவற்றை ஏற்க முடியாமல் கேள்விகேட்ட என் போன்றவர்கள், அறிவுப்பூர்வமாக நாங்கள் எங்களுடைய வாதத்தில் வென்றுவிட்டோம் என்று இப்போது மார்தட்டிக் கூறிக்கொள்ளலாம். ஓர் அமைப்பை மாற்ற வேண்டும் என்றால் முதலில் அதில் சேர வேண்டும். மாற்றத்தை ஏற்படுத்தும் அதிகாரம் வேண்டும் என்றால் தேர்தல் அரசியலில் இறங்கியாக வேண்டும்,

டெல்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி அடுத்து பஞ்சாபிலும் கோவாவிலும் ஓர் அடையாளத்தை ஏற்படுத்தவிருக்கிறது. குஜராத்தில்கூட ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு போட்டியாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது.

பஞ்சாபில் ஆஆக முதலிடம் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறதா, கோவாவில் அது எத்தனையாவது இடத்தில் வரும் என்பதெல்லாம் முக்கியமில்லை, அதற்கு மக்களிடையே ஆதரவு பரவலாகிக் கொண்டிருக்கிறது.

பாஜகவுக்குப் போட்டியாக அதிதீவிர தேசியவாதமும் பேசுகிறது. ஏழைகளுக்கு நெருக்கமான கட்சி காங்கிரஸ் அல்ல, தாங்கள்தான் என்று காட்டிக்கொள்கிறது. பிரச்சாரக் கூட்டங்களில் ஏதாவது ஒரு கட்சியை, எப்போதாவது ஒருமுறைதான் கேஜ்ரிவால் நேரடியாகத் தாக்கிப் பேசுகிறார். இப்போதுள்ள அரசியல் கட்சிகளையெல்லாம் குலைக்கக்கூடியவர் என்ற தோற்றம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. கேஜ்ரிவாலும் அவருடைய ஆதரவாளர்களும் பொதுவாக இளைஞர்களாகவே இருக்கின்றனர்.

களத்தில் இருக்கும் சுக்வீர் சிங் பாதல் (அகாலிதளம்), ராகுல் காந்தி (காங்கிரஸ்) போன்ற போட்டித் தலைவர்கள் அவரைவிட இளையவர்கள். அவர்கள் அரசியல் வாரிசுகள். கேஜ்ரிவாலோ தனக்குத் தேவையானதைத் தேடித்தான் பெற வேண்டியிருக்கிறது. இதுவரை களத்தில் பணியாற்றியதில்லை, முன் அனுபவம் கிடையாது என்பது கேஜ்ரிவாலுக்கு சாதகமாகவே இருக்கிறது. எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பளித்துப் பாருங்கள் என்று கேட்பது எளிதாக இருக்கிறது. இளைய வாக்காளர்களும் கொடுத்தால்தான் என்ன என்று நினைக்கிறார்கள்.

காங்கிரஸ் வாக்குகளை முழுதாக உறிஞ்சிக் கொண்டதால் டெல்லியில் அபார வெற்றி பெற முடிந்தது. பஞ்சாபிலும் இப்போது அதுதான் நடக்கப் போகிறது. ஆனால் இம்முறை அகாலி-பாஜக கூட்டணி வாக்குகளை உறியப் போகிறது.

ஆஆகவுக்கும் பிற கட்சிகளுக்கும் அதிக வித்தியாசங்கள் உள்ளனவா? ஏற்கெனவே உள்ள கட்சிகளிடம் உள்ள குறைகளை முதலில் பட்டியலிடுங்கள். ஊழல், வயது, பதவியில் இருக்கும்போது மக்களுக்கு எதையும் செய்யாமல் ஏய்ப்பது, உள்கட்சி ஜனநாயகத்தை ஊக்குவிக்கத் தவறுவது, மேலிடம் தான் தீர்மானிக்கும் என்ற கலாச்சாரம் என்று பட்டியல் நீள்கிறது. இந்தத் தீமைகளில் எது ஆஆகவில் போதிய அளவு இல்லை என்று ஒப்பிட்டுப் பாருங்கள்; இத் தீய அம்சங்கள் ஆஆகவில் இப்போதே போதிய அளவில் நிறைந்துள்ளன! ஆஆகவின் தலைவர் நாடெங்கும் அறியப்பட்டவராக இருப்பதால், கட்சிக்காக மாதக் கணக்கில் வெளிமாநிலங்களில் பிரச்சாரம் செய்கிறார். நிர்வாகப் பணி செய்வேன் என்று அரசியல் சட்டப்படி பதவிப் பிரமாணத்தை எடுத்துவிட்டு, டெல்லியை அவரால் புறக்கணிக்க முடிகிறது.

ராகுல் காந்தி இந்தியாவில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது அரசியல் சட்டக் கட்டாயமில்லை, கட்சியிலும் அவருக்கு முக்கியப் பொறுப்பு ஏதுமில்லை என்றாலும், ஒரு வாரமாக வெளிநாட்டில் தங்கினால் அதைப் பெரிய பிரச்சினையாக்கி விடுகிறார்கள்.

அணணா ஹசாரே இயக்கம் தொடங்கி 8 ஆண்டுகள் ஆன பிறகு வலிமை வாய்ந்த தலைவரின் கீழ் அது வலுவான அரசியல் சக்தியாகிவிட்டது.

பின் குறிப்பு: பஞ்சாபில் ஆஆக எழுச்சி பெறுகிறது என்று கடந்த வாரம் கட்டுரை எழுதியதற்குப் பலரிடமிருந்து போன் மூலம் கண்டனங்கள். சமூக வலைதளத்தில் அக்கட்சித் தலைமை உங்களை வசைபாடிய பிறகும்கூட அதை எப்படி ஆதரிக்கிறீர்கள் என்று கேள்வி. என்னைச் சிலர் திட்டுகிறார்கள் என்பதற்காக உண்மையைக் கூறாமல் திரித்து எழுத வேண்டுமா என்ன? அப்படிச் செய்து, என்னுடைய வாசகர்களை ஏமாற்றலாமா?

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

SCROLL FOR NEXT