இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவி முகாம் அமைத்தாகவும் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை யடுத்து திரும்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதை சீன ராணுவம் மறுத்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் அன்ஜா மாவட்டம் சகல்காம் நகரிலிருந்து 94 கி.மீ. தொலை வில் சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அமைந் துள்ளது. இப்பகுதியில் உள்ள இந்திய எல்லையின் இறுதி முனையான ‘ஹதிக்ரா பாஸ்’ வழியாக சீன ராணுவம் கடந்த 9-ம் தேதி இந்திய பகுதிக்குள் ஊடுருவியதாக உளவுத் துறை தகவல்கள் கூறுகின்றன.
சுமார் 45 கி.மீ. தூரம் இந்திய பகுதிக்குள் ஊடுவிய அவர்கள், பிளம் என்ற இடத்தில் தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் இதை கவனித்துள்ளனர். சீன வீரர்களைத் திரும்பிச் செல்லு மாறு கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்துள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, எல்லையி லிருந்து 3 கி.மீ. தொலைவில் சீன பகுதியில் உள்ள தமாய் என்ற இடத்தில் இருதரப்பு ராணுவ அதிகாரிகளும் கடந்த 14-ம் தேதி கொடி அமர்வு கூட்டம் நடத்தி உள்ளனர். அப்போது, இந்திய பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற இந்திய ராணுவத் தின் கோரிக்கையை சீன ராணுவம் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரு நாடுகளுக் கிடையே ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தப் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப் பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இதுதொடர்பான கேள்விக்கு சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் பெய்ஜிங்கில் நேற்று கூறும்போது, “இந்தியா சீனா இடையிலான எல்லை விவகாரத்தில் எங்கள் நிலைப்பாடு உறுதியாக, தெளிவாக உள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான எல்லை வரையறுக்கப்பட வேண்டி உள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. அதேநேரம், எல்லைக் கட்டுப்பாடு கோடு தொடர் பான இருதரப்பு ஒப்பந்தத்தை சீன ராணுவம் எப்போதும் மதித்து நடந்து வருகிறது. எல்லை பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.