இந்தியா

‘குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாக தாய்மார்களைப் பார்க்காதீர்கள்’ -மாநிலங்களவையில் கனிமொழி ஆவேசம்

ஆர்.ஷபிமுன்னா

‘தாய்மார்களை குழந்தை பெற்றுத் தரும் இயந்திரமாகப் பார்க்காதீர்கள்’ என இன்று மத்திய அரசை கனிமொழி கேட்டுக் கொண்டார். அப்போது, திமுகவின் மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான அவர், இதை ஆவேசமாகக் குறிப்பிட்டார்.

‘பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை திருத்த மசோதா’ மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்டது. இந்த திருத்த மசோதாவில் குழந்தை பெறும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை ஆறு மாதமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கருத்தரிக்க வாய்ப்பில்லாத பெண்களுக்காக... தங்களது கருவில் குழந்தையைத் தாங்கி பெற்றுத் தரும் தாய்மார்களுக்கு இந்த ஆறுமாத விடுமுறை இல்லை என்றும், 15 முதல் 20 நாள் வரையிலான சாதாரண விடுமுறைதான் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து மாநிலங்களவையில் பேசிய கனிமொழி கூறியதாவது: ‘‘பெண்களை குழந்தை பெறும் இயந்திரமாகப் பார்க்காதீர்கள். பெற்ற குழந்தையோடு இருந்தால்தான் அந்தத் தாய்க்கு மகப்பேறு விடுப்பு என்பது நியாயமானதாக இல்லை. குழந்தை பெறுதல் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு போலாகும். பிரசவம் ஆன தாய்மார்கள் அனைவரும் மீண்டும் ஆரோக்கியமான உடல் நலம் பெற ஓய்வு தேவை. எனவே, அனைத்து வித தாய்மார்களுக்கும் ஒரே மாதிரியான விடுப்பு என்றே இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

ஆனால் கனிமொழியின் பேச்சிற்கு பதிலளித்த மத்திய பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், ‘மற்றவர்களுக்காக தங்கள் கருவில் குழந்தைகளை சுமந்து பிரசவிக்கும் பெண்கள் குழந்தை பெற்ற பிறகு குழந்தையுடனே இருப்பதில்லை. அதனால் அவர்கள் இந்த மகப்பேறு விடுமுறை சலுகைக்குள் வரமாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT