இந்தியா

பெங்களூருவில் விடிய விடிய கொட்டிய மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

இரா.வினோத்

ஏரிகள் உடைப்பெடுத்தன; மக்கள் கடும் அவதி; படகுகளில் மீட்பு பணி தீவிரம்

பெங்களூருவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் ஏரிகள் உடைந்து 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. தெருக்களிலும், சாலைகளிலும் வெள்ள நீர் தேங்கி இருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள் ளனர்.

பெங்களூரு, ராம்நகர், மண்டியா, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கடந்த சில தினங்களாக இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. பெங்களூரு சர்வதேச விமான நிலைய சாலை பகுதியில் 1.6 செமீ மழையும், பெங்களூரு நகர பகுதியில் 4 செமீ மழையும் பதிவானது. 10 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இரவில் இவ்வளவு மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன மழை காரணமாக‌ சிவாஜிநகர், கெங்கேரி, பனசங்கரி, பசவன்குடி, பாபுஜிநகர், பிலேகாஹள்ளி, பழைய விமான நிலைய சாலை, எஸ்எஸ்ஆர் லே அவுட் உள்ளிட்ட பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது. 6 இடங்களில் பழைய கட்டிடங்களும், சாலையோரம் இருந்த 120 மரங்களும் சாய்ந்தன. பிடிஎம் லே அவுட், கோடிசிக்கன‌ஹள்ளி, பெல‌க்கனஹள்ளி, பன்னார்கட்டா சாலை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட‌ வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ ஆகியவை வெள்ளத்தில் மூழ்கின.

கோடி சிக்கனஹள்ளி பகுதியில் வெள்ளநீர் முதல் தளம் வரை சூழ்ந்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதையடுத்து தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் குழுவினர் படகு மூலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பால், உணவு பொருள் ஆகியவற்றையும் வழங்கினர். இதையடுத்து அப்பகுதி மக்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளானர்.

இதனிடையே பெல்லந்தூர், ஏமலூர், மடிவாளா ஆகிய ஏரிகள் உடைந்ததில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. வெள்ளத்தில் பாம்புகள் மிதந்து வந்ததால் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். இதே போல மழைநீரில் வந்த மீன்களை மக்கள் பிளாஸ்டிக் பைகைளை விரித்து பிடித்தனர்.

எலெக்ட்ரானிக் சிட்டி, சர்ஜாப்பூர் சாலை, ஓசூர் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் சாலையிலே தவிக் கும் நிலை ஏற்பட்டது. பெங்களூருவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT