மற்ற மொழித் திரைப்படங்களை கன்னடத்திற்கு மொழி மாற்றம் (டப்பிங்) செய்து வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கன்னட திரையுலகினர் பெங்களூரில் திங்கள்கிழமை பேரணி நடத்தினர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியான திரைப்படங்களை கன்னடத்திற்கு மொழி மாற்றம் செய்து வெளியிடு வதை எதிர்த்து கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்க ளூரில் திங்கள்கிழமை கண்டன பேரணி நடைபெற்றது.
இதில் கன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், தர்ஷன், சுதிப் உள்ளிட்டோரும் பாரதி விஷ்ணுவர்தன், பூஜா காந்தி, ராதிகா பண்டிட் உள்ளிட்ட ஏராளமான நடிகைகளும், இயக்குநர்களும்,திரைப்பட தயாரிப்பாளர்களும் கலந்துக் கொண்டனர்.
பேரணியில் நடிகர்களின் ரசிகர்களும் கலந்து கொண்டதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெங்களூர் நகரமே திணறியது.
சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற கண்டன பேரணியை தொடர்ந்து பெங்களூர் சென்ட்ரல் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் நடிகர் சிவராஜ்குமார் பேசுகையில், “நாங்கள் பிறமொழி படங்களுக்கு எதிரானவர்கள் இல்லை.பிறமொழி படங்கள் கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யப்படுவதால் ஆயிரக்கணக்கான கன்னட திரையுலகினர் பாதிக்கப்படு வார்கள். அவரவர் மொழியிலேயே கர்நாடகத்தில் எந்த திரையரங்கில் வேண்டுமானாலும் திரையிட்டு கொள்ளலாம்'' என்றார்.