இலங்கையில் மனித உரிமைகளை மீறியவர்களை, அந்நாட்டு அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.
மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நடந்த இரண்டாவது தெற்கு ஆசிய மாநாடு இன்று தொடங்கியது. அதில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இலங்கை அரசுக்கு உள்ளது" என்றார்.
இலங்கையில் தமிழர்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில், அந்நாட்டின் முதலீட்டுக்கு ஏன் அனுமதிக்க வேண்டும்? என்று பிரதிநிதிகளில் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிதம்பரம், "இது ஒரு மனித உரிமை மீறல்கள் விவகாரம்" என்றார்.
இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் நெருக்கடிக்கு, அந்நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சிய அடையக் கூடாது என்பது அர்த்தம் அல்ல என்ற அவர், "யாருமே சேவைக்காக முதலீடு செய்வதில்லை. லாபம் பெறும் அளவுக்கு வாய்ப்பு இருந்தால் மட்டுமே வெளிநாட்டினர் ஒரு நாட்டில் முதலீடு செய்வர்" என்றார்.
போர்க்குற்றங்களை காரணம் காட்டி, இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டைத் தடுப்பது சரியானதல்ல என்றே தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கைச் சென்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த கெடு விதித்திருந்தார்.
மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி கனடா மற்றும் மொரிஷீயஸ் பிரதமர்கள் அம்மாநாட்டைப் புறக்கணிக்க, தமிழகத்தின் அழுத்தம் காரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்துகொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.