இந்தியா

பிரதமர் யாழ்ப்பாணம் வராததற்கு மன்னிப்புக் கேட்கிறேன்: குர்ஷித்

செய்திப்பிரிவு

பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வராததற்குத் தாம் மன்னிப்புக் கேட்பதாக, வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

இலங்கை சுதந்திரம் அடைந்த 1948-க்குப் பிறகு, அந்நாட்டின் யாழ்ப்பாணம் மாகாணத்துக்கு வருகைதந்த முதல் பிரதமர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார், பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன். இதையொட்டியே, பிரதமர் மன்மோகன் சிங் யாழ்ப்பாணம் வராததற்கு மன்னிப்புக் கேட்பதாக குர்ஷித் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறும்போது, "இது வருந்தத்தக்க விஷயம் இல்லையா? யாரைக் குறை கூறுவது? என் நாட்டின் பிரதமர் தான் முதலில் அங்கு (யாழ்ப்பாணம்) செல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அதற்காக யாரைக் குற்றம் சொல்வது?

நாங்கள் தமிழர்களுக்காக 50,000 வீடுகளைக் கட்டியுள்ள பகுதிக்கு பிரதமரை அழைத்துச் செல்ல முடியாமல் போனதில் ஏமாற்றம் அடைந்துள்ளோம். யாழ்ப்பாணத்தில் உள்ள சாலைகள், கட்டடங்கள் நாம் அமைத்தது என்று அவரிடம் காட்டிச் சொல்ல முடியாமல் போய்விட்டது.

அவர்கள் (பிரதமர் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்) வியூகம் பலனளிக்கக் கூடியதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு மட்டுமே நிலவியது" என்றார் சல்மான் குர்ஷித்.

முன்னதாக, பிரதமரின் இலங்கைப் பயணத்திட்டத்தில், காமன்ல்வெத் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்பு யாழ்ப்பாணம் செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு நிர்ப்பந்தங்கள் காரணமாகவே இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில்லை என பிரதமர் மன்மோகன் சிங் முடிவு எடுத்தார் என வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றொரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்தித்து தற்போதைய நிலவரங்களை கேட்டுத் தெரிந்துகொண்டார்.

SCROLL FOR NEXT