உத்தரப் பிரதேச மாநிலம் தூய்மையில் பின்தங்கியிருப்பதால் மாநிலத்தை தூய்மையாக்குவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
அண்மையில் தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முதல் 100 நகரங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாரணாசி மட்டுமே இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சக அமைச்சர் சுரேஷ் கன்னாவுடன் ராம் மோகன் வார்டுக்கு வந்தார். அப்பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைகளை பெருக்கி சுத்தம் செய்தார். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் பராமரிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய யோகி ஆதித்யநாத், "உ.பி.யில் பாஜக ஆட்சி அமைவதற்கு முன்னதாகவே இந்த கணக்கெடுப்பு நடந்து முடிந்துவிட்டது. இருப்பினும், உ.பி. மாநிலத்தை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை கையில் எடுத்துள்ளோம். டிசம்பர் 2017-க்குள் மாநிலத்தின் 30 மாவட்டங்களையும் அக்டோபர் 2018-க்குள் உ.பி. முழுவதையும் பொது இடங்களில் மலம் கழிக்கும் பழக்கமில்லாத மாநிலமாகவும் மாற்றுவோம்" என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது மாநகராட்சி ஊழியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உத்தரப் பிரதேச மாநிலத்தை தூய்மையான மாநிலமாக மாற்றுவதே இந்த அரசின் இலக்கு என்று அவர்களிடம் தெரிவித்தார்.
சரமாரி கேள்வி:
மாநகராட்சி ஊழியர்களுக்கு சரமாரி கேள்வியை முன்வைத்த ஆதித்யநாத், "நமது தலைநகர் ஏன் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறது. தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களில் லக்னோ நகரம் இடம்பெறாதது ஏன்? பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே சாக்கடைகளை தூர்வாரி சுத்தம் செய்யுங்கள். சாக்கடைகள் தெருக்களில் ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அனைத்து மாநகராட்சி வார்டுகளுக்கும் தூய்மை பராமரிப்பு குறித்து தெளிவான உத்தரவை பிறப்பியுங்கள். மக்கள் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டாமல் இருப்பதற்கு வசதியாக ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வையுங்கள்" என்றார்.
உ.பி. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர், யோகி ஆதித்யநாத் தனது அலுவலக அதிகாரிகளை தூய்மை தொடர்பாக உறுதிமொழி ஏற்கவைத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
தூய்மையான நகரங்கள்:
'நாட்டில் தூய்மையான நகரங்கள் - 2017' குறித்து 434 நகரங்களில் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இதில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாமை, திடக்கழிவுகள் மேலாண்மைக்கு (சாலைகளைச் சுத்தப்படுத்தல், குப்பை சேகரித் தல், அதை வேறு இடத்துக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லுதல், குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்தல் உட்பட) 45% மதிப்பெண் வழங்கப்பட்டது.
நகரின் தூய்மையை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு 25% மதிப்பெண் மற்றும் குடிமக்களின் கருத்துகளுக்கு 30% மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுக்க 18 லட்சத் துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நகரம் குறித்த கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆய்வில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் மிக தூய்மையானது என்று முதலிடம் பிடித்தது.