மகாராஷ்டிர மாநிலம், மும்பை அந்தேரி புறநகர் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.
மும்பையின் மேற்கு அந்தேரி, ஜுகு கல்லி குடிசைப் பகுதியில், 3 தளங்களை கொண்ட சிறிய கட்டிடம் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டிடத்தில் தரை தளத்தில் வாஃபா என்ற பெயரில் மருந்துக் கடை செயல்பட்டு வந்தது. கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் 2 குடும்பங்கள் வசித்து வந்தன. இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் மருந்துக் கடையில் தீப்பற்றியது. அப்போது மேல் தளங்களில் வசித்தவர்கள் உறக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் தீ மளமளவென பரவியதில் அவர்கள் வெளி யேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் தொடக்கத்தில் 8 பேரும், படுகாயம் அடைந்த ஒரு பெண் பின்னர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். உயிரிழந்த 9 பேரில் 5 பேர் குழந்தைகள் ஆவர். இந்த ஐவரில் 3 மாத கைக்குழந்தையும் அடங்கும்.
தீ விபத்தில் இறந்தவர்கள் சபுரியா மொஸின் கான் (52), சித்திக்கான் (35), ரபீல் கான் (28), சபியா கான் (28), மொஸெல் கான் (8), உன்னிஹய கான் (5), அலிஸா கான் (4), துப்பா கான் (8) அல்தாஸ் கான் (3 மாதங்கள்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனிடையே தீயணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவினாஷ் என்ற வீரர் காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மின்சாரக் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. என்றாலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீ ஸார் தெரிவித்தனர்.