இந்தியா

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமருக்கு ராகுல் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி ஏழைகள் நலனுக்காக அரசை வழிநடத்திச் செல்ல வேண்டும். கடன் தொல்லையால் கதறி அழும் விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றிப் பெற்று 27 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக தியோரியாவில் இருந்து டெல்லி வரையிலான 2,500 கி.மீ தூர மகா கிசான் (விவசாயி) யாத்திரையை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன் தினம் தொடங்கினார். அப்போது வீடு, வீடாக சென்று விவசாயிகளின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.

இந்நிலையில் இந்த யாத்திரையின் 2-வது நாளான நேற்று கோரக்பூர் சென்ற ராகுல் காந்தி அங்குள்ள பொதுமக்களைச் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்காக ரூ.1.10 லட்சம் கோடி கடன்களை பிரதமர் நரேந்திர மோடி தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் கடன் தொல்லையால் கதறி அழும் விவசாயிகளை அவர் கண்டுகொள்ளவில்லை. பணக்காரர்களின் கடனைத் தள்ளுபடி செய்வது பிரதமரின் தனிப்பட்ட விருப்பம். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

அதே சமயம் ஏழைகளுக் காகவும் அவர் அரசு நடத்த வேண்டும். பணக் காரர்களுக்காக கடன்கள் தள்ளுபடி செய்யும்போது ஏழை விவசாயிகளுக்காகவும் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

தண்ணீர் பஞ்சம், உரத் தட்டுப்பாடு, கடன்கள், விளைச் சலுக்கான குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மின்சாரம் ஆகிய காரணங்களால் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே, விவசாயிகளின் துன்பத்தை அரசு தனது தோளில் சுமக்க முன் வர வேண்டும்.

மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. இதனால் விவசாயிகளின் வேதனைகளை காங்கிரஸால் போக்க முடியவில்லை. எனினும் போராட்டம் மூலம் விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ரூ.70,000 கோடி அளவுக்கு விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல் தற்போதைய ஆட்சியிலும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். இதற்காக ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT