லாலுபிரசாத் யாதவ்வின் பினாமி சொத்துக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைகள் குறித்து அவர் கருத்து கூறியபோது, பாஜக-வின் இத்தகைய அச்சுறுத்தல்களால் தன் குரலை அடக்கி விட முடியாது என்றார்.
ரெய்டுக்கு சில மணி நேரங்கள் கழித்து லாலு ட்வீட் செய்யும் போது, “லாலுவின் குரலை அடக்க பாஜகவுக்கு தைரியம் கிடையாது. அப்படியே லாலுவின் குரலை அடக்கினால் ஆயிரமாயிரம் லாலுக்களின் குரல்கள் ஒலிக்கும். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் என்னை அடக்கி விட முடியாது” என்று பதிவிட்ட லாலு, பாஜக-வின் புதிய கூட்டாளிகளுக்காக அக்கட்சிக்கு கேலியாக வாழ்த்து தெரிவித்தார் லாலு. ஆனால் புதிய கூட்டாளிகள் யார் என்று அவர் தெரிவிக்கவில்லை.
ராஷ்டிரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா, அந்தப் புதிய கூட்டளிகள் வருமானவரித்துறை மற்றும் சிபிஐ என்று தெளிவுபடுத்தினார்.
“புதிய கூட்டாளிகளுக்காக பாஜக-வை வாழ்த்துகிறேன், லாலு பிரசாத் யாதவ்வை அடக்கி விட முடியாது, என் கடைசி மூச்சு வரை பாசிஸ்டுகளை எதிர்ப்பேன்” என்று இன்னொரு ட்வீட் செய்துள்ளார் லாலு.
மேலும், லாலு தனது ட்வீட்களில், 22 இடங்களில் ரெய்டு என்று ஊடகத்தினர் கூறுகின்றனரே, எந்தெந்த இடங்கள் என்று கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியதோடு, பாஜக ஆதரவு ஊடகங்களுக்கும் அவர்களது கூட்டணி கிளைகளுக்கும் நான் அஞ்சப்போவதில்லை என்றார்.
லாலுவின் இந்த ட்வீட்களுக்கு பதில் ட்வீட் செய்த பாஜகவின் சுசில் குமார் மோடி, “லாலுஜி நீங்கள் என்ன விதைத்தீர்களோ, அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்” என்றார்.
நிதிஷ் குமாரையும் விமர்சனம் செய்த சுசில் குமார் மோடி, “நிதிஷ் குமார் லாலு மீதான இத்தகைய நடவடிக்கைகளின் பலனை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார், ஆனால் அவர் ஒன்றுமே செய்வதில்லை” என்று சாடினார்.