இந்தியா

உத்தரகண்ட் முதல்வராக ஹரீஷ் ராவத் பதவியேற்பு

செய்திப்பிரிவு

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவத் (65) சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.

அந்த மாநில முதல்வராக இருந்த விஜய் பகுகுணா கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹரித்வார் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவின்போது நிவாரண, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவில்லை என்று அவர் மீது புகார் கூறப்பட்டது. இந்த விவகாரத்தால் கட்சி மேலிட உத்தரவின்பேரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து மாநிலத்தின் புதிய முதல்வர் பதவிக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவத், இந்திரா ஹரிதேஷ், மாநில மூத்த அமைச்சர் பிரீதம் சிங் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில் ஹரீஷ் ராவத்தை தேர்ந்தெடுக்க கட்சித் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து டேராடூனில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றத் தலைவராக ஹரீஷ் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஹரீஷ் ராவத் மாநிலத்தின் 8-வது முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆசிஷ் குரேஷி பதவி பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முந்தைய விஜய் பகுகுணா ஆட்சியில் அமைச்சர்களாகப் பதவி வகித்த 11 பேரும் ஹரீஷ் ராவத்துடன் பதவியேற்றுக் கொண்டனர். 70 உறுப்பினர்கள் கொண்ட உத்தரகண்ட் சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

7 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட பி.டி.எப். கட்சி, 3 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பகுஜன் சமாஜ், 3 சுயேச்சைகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடத்தி வருகிறது. பாஜகவுக்கு 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

SCROLL FOR NEXT