இந்தியா

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்

பிடிஐ

உ.பி.மாநிலத்தை உலுக்கிய பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு பிரஜாபதிக்கு அளித்த ஜாமீன் உத்தரவுக்கு தடை விதித்தது. இந்நிலையில் “ஜாமீன் வழங்கிய நீதிபதி ஓ.பி.மிஸ்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அலகாபாத் உயர் நீதிமன்ற பதிவாலர் டி.கே.சிங் பிடிஐ-யிடம் தெரிவித்தார்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நிர்வாகம் இந்த சஸ்பெண்ட் முடிவை எடுத்துள்ளது, இதனையடுட்து மிஸ்ரா தற்போது துறை சார்ந்த விசாரணையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

யோகி ஆதித்யநாத் அரசு பிரஜாபதி ஜாமீனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தது, இதனையடுத்து ஜாமீனுக்கு தலைமை நீதிபதி திலிப் போஸ் தடை விதித்து உத்தரவிட்டார்.

அதாவது தன் மீது வேறு கிரிமினல் வழக்குகள் இல்லை என்று பிரஜாபதி முறையிட்டதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது, ஆனால் வழக்கறிஞர் வி.கே. ஷாஹி, கூறும்போது, பிரஜாபதி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திவிட்டார் என்றும் அவர் மீது 6 கிரிமினல் வழக்குகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்தே ஜாமீன் ரத்து செய்யப்பட்டது, ஜாமீன் வழங்கிய நீதிபதி மிஸ்ரா சஸ்பெண்ட் செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொள்கிறார்.

SCROLL FOR NEXT