இந்தியா

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட கோரி பிரணாப் முகர்ஜியிடம் ஒமர் தலைமையில் எதிர்க்கட்சிகள் நேரில் மனு

பிடிஐ

காஷ்மீர் பிரச்சினையில் தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்று ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த 20 எதிர்க்கட்சித் தலைவர்கள் சனிக்கிழமை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.

முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் சுமார் 20 எதிர்க்கட்சித் தலைவர்கள், ராஷ்ட்ரபதி பவனில் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் கலந்தாலோசித்தனர்.

அதாவது காஷ்மீரின் தற்போதைய பிரச்சினைக்கு நிர்வாக ரீதியான மத்திய அரசின் அணுகுமுறையக் கைவிட்டு அரசியல் ரீதியான தீர்வு காண பிரணாப் முகர்ஜி தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை இவர்கள் முன் வைத்தனர்.

செய்தியாளர்களிடம் ஒமர் அப்துல்லா கூறும்போது, “காஷ்மீர் பிரச்சினையை அங்கீகரிப்பதில் மத்திய அரசு தோல்வி கண்டதால் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. இது அரசியல் பிரச்சினை என்பதை மத்திய அரசு உணரவில்லை.

எனவே, காஷ்மீர் பிரச்சினையில் ஒரு அர்த்தமுள்ள, நம்பகமான, சுமுக அரசியல் தீர்வு காண இதில் ஈடுபட்டுள்ள அனைவரையும் அழைத்து அர்த்தமுள்ள அரசியல் உரையாடலைத் தொடங்க பிரணாப் முகர்ஜி மத்திய அரசை அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

தொடர்ந்து அரசியல் ரீதியாக அணுகாமல் நிர்வாக ரீதியாக பிரச்சினைகளை அணுகுவது மாநிலத்தின் ஸ்திரத்தன்மையையும், அமைதியையும் குலைப்பதாக உள்ளது.

கடந்த 42 நாட்களாக காஷ்மீரில் பற்றி எரியும் தீ, பீர் பஞ்சால் மற்றும் செனாப் பள்ளத்தாக்கிற்கும், கார்கிலுக்கும் பரவியுள்ளது. சூழ்நிலை மிகவும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது, மத்திய அரசு எப்போது விழித்துக் கொள்ளும் என்று தெரியவில்லை. போராட்டத்தை நிர்வாக நடவடிக்கைகள் மூலம் அடக்குவது, அதாவது, பெட்ரோல் விற்பனைக்குத் தடை விதிப்பது, பிற அத்தியாவசிய பொருட்களை முடக்குவது போன்ற நிர்வாக நடவடிக்கைகளினால் எந்தவிதப் பயனும் இல்லை.

எதிர்க்கட்சிகள்தான் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதங்களை எழுப்பி வருகின்றன. எதிர்க்கட்சிகளே அரசியல் தீர்வுக்கு மத்திய அரசை நெருக்கி வருகிறது.

மாநிலத்தின் மக்களுடன் உரையாடல் மேற்கொள்வதை மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்தி வந்தால், இன்னும் அன்னியமாதலில் போய் முடிந்து எதிர்காலச் சந்ததியினர் மீது நிச்சயமின்மை என்ற நிழல் படியவே வழிவகுக்கும்” என்றார்.

மேலும், அப்பாவி மக்கள் மீது கடுமையான ஆயுதப் பிரயோகத்தைத் தடுக்க குடியரசுத் தலைவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மாநில மற்றும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று இந்தக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT