மத்திய அரசு நிதி என்பது மக்களின் வரிப் பணமா அல்லது ராகுலின் தாய்மாமன் வீட்டுச் சீதனமா என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக சார்பில் பிமத்ரா பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி ஆட்சி அமையப் போகிறது. இதனால் தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது. அந்தக் கட்சித் தலைவர்கள் தோல்வி பயத்தில் ஏதேதோ உளறி வருகின்றனர்.
பாஜக அரசின் நிர்வாக சீர்கேட்டினால் சத்தீஸ்கர் மாநிலம் வறுமையால் வாடுவதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அவருக்கு என் சார்பில் சில விளக்கங்கள்.
பிரதமரும் மத்திய நிதியமைச்சரும் சத்தீஸ்கர் அரசின் சாதனைகளைப் பாராட்டி புகழ்ந்துள்ளனர். பல்வேறு துறைகளில் சாதித்ததற்காக ஏராளமான விருதுகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. இந்த தகவல்களையெல்லாம் சோனியா காந்தி வீட்டிலேயே படித்து சரிபார்த்துவிட்டு அதன் பின்னர் சத்தீஸ்கர் பொதுக்கூட்ட மேடைகளில் ஏறிப் பேசினால் நன்றாக இருக்கும்.
இலவச அரிசி, இலவச மின்சாரம் என பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் அள்ளி வீசியுள்ளது. அந்தக் கட்சி ஏற்கனவே அளித்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாயிற்று? அவற்றை நிறைவேற்றிய பின்னரே புதிய வாக்குறுதிகளை அறிவிக்க வேண்டும். பொய் வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களை காங்கிரஸ் ஏமாற்றுகிறது.
ராகுலின் தாய்மாமன் வீட்டுச் சீதனமா?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் அடிக்கடி ஒரு குற்றச்சாட்டை கூறுகிறார்கள். மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோடிக்கணக்கில் நிதி அளிக்கிறது. அந்த நிதியை மாநில அரசுகள் முறையாகப் பயன்படுத்தவில்லை என்று இருவரும் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் சொந்த நிதியை மாநில அரசுகளுக்கு வாரியிறைப்பதுபோல் அவர்கள் பேசுகிறார்கள்.
இதேபோல் சத்தீஸ்கருக்கு உணவு தானியத்தை தாராளமாக வழங்கி படியளப்பதாக சோனியாவும் ராகுலும் கூறுகின்றனர். சத்தீஸ்கர் மக்கள் ஒன்றும் பிச்சை பாத்திரம் ஏந்தி நிற்கவில்லை. மத்திய அரசு நிதி என்பது மக்களின் வரிப் பணம். அது ராகுலின் தாய்மாமன் வீட்டுச் சீதனம் அல்ல.
பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இரங்கல்
சத்தீஸ்கர் சட்டமன்ற முதல் கட்டத் தேர்தலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை வீரத் தியாகிகளாக அறிவித்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் பெயர்களை வெளியிட வேண்டும். ஜனவரி 25-ம் தேதி வாக்காளர் தினத்தில் அவர்களை கெளரவிக்க வேண்டும் என்றார்..