"எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
ஏர்செல்-மேக்சிஸ் வர்த்தக நடவடிக்கை விவகாரத்தில் புதிதாக கார்த்தி சிதம்பரம் பெயர் அடிபடத் தொடங்கியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் அதிமுக கவன ஈர்ப்பின் படி விவாதம் நடைபெற்றது.
அப்போது கூறிய அருண் ஜேட்லி, “எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தாலும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாக்க உகந்த புனிதப் பசுக்கள் இந்த விவாகரத்தில் இல்லை.
மத்திய அரசு இது குறித்து ஒவ்வொரு வழக்கிலும் அதன் வேரை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது குறித்து அரசும் மந்தமாக செயல்படுகிறது என்பது முழுதும் தவறான பார்வை. இது குறித்து சிபிஐ தனது முதற்கட்ட குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது, விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இதுபற்றி கடந்த அரசின் நிலைப்பாடு என்னவாக வேண்டுமானலும் இருந்து விட்டுப் போகட்டும் நாங்கள் அந்த நிலைப்பாட்டினால் தாக்கம் பெறப்போவதில்லை.
விசாரணை குழுக்கள் இது பற்றி தங்களின் விசாரணையை சுதந்திரமாக நடத்தலாம், ஒட்டுமொத்த சாட்சியையும் அவர்கள் பதிவு செய்யலாம், நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என்றார்.
இதுபற்றி நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது அதிமுக உறுப்பினர் டி.ஜே.வெங்கடேஷ் மீண்டும் மீண்டும் 2 முன்னாள் மத்திய அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பெயர்களைக் குறிப்பிட்டார், ஆனால் அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் உடனடியாக அதற்கு அனுமதி மறுத்தார்.
இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னதாக கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை கோரி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.