இந்தியா

பஸ் நிலையத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பிச்சைக்கார மூதாட்டி: கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்

இரா.வினோத்

கர்நாடகாவில் பேருந்து நிலை யத்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பிச்சைக்கார மூதாட்டி ஒருவர் பிரசவம் பார்த்து அங்குள்ளவர்களை நெகிழச் செய்தார்.

ரெய்ச்சூர் மாவட்டம், மான்வி அருகேயுள்ள சன்னா பஜாரைச் சேர்ந்தவர் ராஜண்ணா (35). விவசாய தொழிலாளியான இவர் தனது மனைவி எல்லம்மா (30) மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எல்லம்மாவுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. எனவே அவரைப் பேருந்தில் ரெய்ச்சூர் அரசு மருத்துவ மனைக்கு ராஜண்ணா அழைத்துச் சென்றார்.

ரெய்ச்சூரில் பேருந்தில் இருந்து இறங்கும்போது எல்லம்மா தடுமாறி கீழே விழுந்தார். மேலும் அவர் பிரசவ வலியால் துடித்தார். இதனால் ராஜண்ணா செய்வதறியாது திகைத்தார். அப்போது அங்கு ஓடிவ‌ந்த, சுமார் 60 வயது பிச்சைக்கார மூதாட்டி ஒருவர், எல்லம்மாவை மறைவான இடத்துக்கு கொண்டுச் சென்றார். அங்கு எல்லம்மாவுக்கு பிரசவம் பார்க்கும் வேலையில் ஈடுபட்டார். இதைக் கண்ட மற்ற பெண்களும் அவருக்கு உதவியாக இருந்த னர். இறுதியில் எல்லம்மா சுகப் பிரசவம் மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

குழந்தையை முத்தமிட்ட மூதாட்டி அதை, ராஜண்ணாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

தக்க சமயத்தில் உதவிய அந்த பெண்மணிக்கு எல்லம்மா வும், ராஜண்ணாவும் நன்றி கூற முடியாமல் தவித்தனர்.

SCROLL FOR NEXT