எந்த அமைச்சர் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் வீடு மாறிச் சென்றுள்ளார் கேரள புலனாய்வுத் துறை அதிகாரி.
கேரள போலீஸ் புலனாய்வுத் துறை கூடுதல் டிஜிபி முகமது யாசின். மூத்த ஐபிஎஸ் அதிகாரி. மாநில வருவாய்த் துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் வீட்டுக்கு நேற்று காலை 7.30 மணிக்கு யாசின் சென்றார். அவரைச் சந்திக்க அமைச்சரும் வீட்டுக்கு வெளியில் வந்தார். அப்போது அவரிடம், ‘நீங்கள் வேளாண் துறை அமைச்சர் சுனில் குமார்தானே’ என்று யாசின் கேட்டுள்ளார்.
அதைக் கேட்டு அமைச்சர் சந்திரசேகரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தனது ஊழியர்களை அழைத்து கட்சி தோழரும் வேளாண் துறை அமைச்சருமான சுனில் குமாரின் வீட்டைக் காட்டும் படி உத்தரவிட்டார். மாநிலத்தின் புலனாய்வுத் துறை மூத்த அதி காரியே அமைச்சர் யார் என்பது கூட தெரியாமல் வீடு மாறி சென்று விசாரித்தது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அமைச்சர் சந்திரசேகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘அதிகாரி யாசின் வீடு மாறி என்னைச் சந்திக்க வந்தது உண்மைதான். இதுபோன்ற தவறு நடக்க கூடாது. முக்கியமாக புலனாய்வுத் துறை அதிகாரி ஒருவர் இந்த தவறு செய்ய கூடாது’’ என்றார்.