இந்தியா

கருணைக்கொலை விவகாரம்: அரசியல் சாசன அமர்வு முடிவெடுக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கருணைக்கொலைக்கு அனுமதி கோரும் மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்து உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய் கிழமை) உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் கருணைக் கொலை தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

மனுவில், ஆயுள் முழுவதும் நோய்வாய்ப்பட்டிருக்கும் ஒரு நபர் மருத்துவ உகரணங்கள் உதவியுடன் மட்டுமே வாழ்வதை தடுத்த நிறுத்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய், எஸ்.கே.சிங் அடங்கிய அமர்வு, கருணைக் கொலை விவகாரத்தில் தெளிவான சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்படுவதாக தெரிவித்தது.

மத்திய அரசு எதிர்ப்பு:

கருணைக் கொலைகளை அனுமதிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கருணைக்கொலை தற்கொலைக்கு நிகரானது அதை இந்திய தேசத்தில் அனுமதிக்க முடியாது என தொடர்ந்து மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

பொதுநல வழக்கு:

கடந்த 2008-ஆம் ஆண்டு, 'காமன் காஸ்' (Common Cause) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல வழக்கு விசாரணையின் போது, கூடுதல் சோலிசிடர் ஜெனரல் சித்தார்த் லுத்ரா, கருணைக்கொலைகளை அனுமதிப்பது மருத்துவ கோட்பாடுகளுக்கு எதிரானது என வாதிட்டிருந்தார்.

ஆனால், தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷன், மருத்துவ உதவி இல்லாமல் இனி வாழ முடியாது என்ற நிலையில் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் ஒரு நபரை சிகிச்சை அளிப்பது கொடுமையானது. ஏற்கெனவே நோயில் இருக்கும் நபருக்கு மேலும் துன்பம் அளிப்பது போன்றது அத்தகைய சிகிச்சை, என கூறியிருந்தார்.

இத்தகைய சூழலில், கருணைக்கொலைக்கு அனுமதி கோரும் மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT