இந்தியா

பிஹாரில் குளத்தில் பேருந்து கவிழ்ந்து 50 பேர் பலியானதாக அச்சம்

செய்திப்பிரிவு

பிஹார், மதுபானி மாவட்டத்தில் கடும் கூட்ட நெரிசலுடன் வந்து கொண்டிருந்த பேருந்து கட்டுப்பாடு இழந்து குளத்தில் பாய்ந்து மூழ்கிய விபத்தில் 50 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

இது வரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால் சுமார் 50 பேர்களுடன் நிரம்பி வழியும் குளத்தில் மூழ்கிய பேருந்து விபத்தில் ஒருவர் கூட பிழைக்க வாய்ப்பில்லை என்றே உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது: மதுபானியிலிருந்து சிதமாரிக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து மாநில நெடுஞ்சாலை எண் 52-ல் சுந்தர்பூர் அருகே சாலையோரத்தில் உள்ள குளத்தில் கவிழ்ந்தது, என்றார்.

குறைந்தது 50 பேர் பேருந்தில் பயணித்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடும் வேகத்தில் வந்த பேருந்து கட்டுப்பாடு இழந்து ஆழம் மிகுந்த குளத்தில் விழுந்து மூழ்கியது என்று போலீஸ் உயரதிகாரி நிர்மலா குமாரி தெரிவித்தார்.

விபத்து நடந்து சுமார் ஒருமணி நேரம் சென்ற பிறகு மாவட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்தத் தாமதத்தினால் கிராம மக்கள் ஆவேசமடைந்து அதிகாரிகள் மீது பாய்ந்து அவர்களை சம்பவ இடத்திலிருந்து விரட்டியடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்துக் குறித்து கிராமத்தினர் பத்திரிகையாளர்களிடம் கூறிய போது, இதில் ஒருவர் கூட பிழைக்க வாய்ப்பில்லை என்று கூறினர். பஸ் நீரில் மூழ்கி விட்டது, அதிலிருந்து ஒருவர் கூட எழுந்து வரவில்லை என்று உள்ளூர்வாசி ரஜத் குமார் தெரிவித்தார்.

பிஹாரில் சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தினால் குளங்களில் நிரம்பி வழிகின்றன.

          
SCROLL FOR NEXT