இந்தியா

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குரை விசாரிக்க சிறப்புக் குழு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சில முக்கியப் பிரமுகர்கள் ரஞ்சித் சின்ஹா சிபிஐ இயக்குநராக இருந்தபோது, அவரது வீட்டுக்குச் சென்று சந்தித்ததாக புகார் எழுந்தது. அவரது வீட்டு வருகைப் பதிவேட்டில் இதற்கான ஆதாரம் இருப்பதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து சின்ஹா மீது வழக்கு பதிவு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, இதன் உண்மை தன்மை குறித்து விசாரிக்க, சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநர் எம்.எல்.சர்மா தலைமையில் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத் தது. இக்குழு கடந்த ஆண்டு மார்ச் 4-ம் தேதி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகியிடம் நீதிமன்றம் வழங்கியது.

இதைப் படித்துப் பார்த்த ரோத்தகி, கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி, நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன்வைத்தார். அப்போது, “நிலக்கரி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ரஞ்சித் சின்ஹாவை சந்தித்துப் பேசி உள்ளனர். இது முற்றுலும் பொருத்தமற்றதாக உள்ளது. இதன்மூலம் நிலக்கரி ஊழல் வழக்கை திசைதிருப்ப முயற்சி நடந்திருப்பதற்கு வாய்ப்பு உள்ளது” என்றார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் எம்.பி.லோகுர், குரியன் ஜோசப் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று தனது தீர்ப்பை வழங்கியது. அப்போது, சின்ஹா மீதான புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

இதுகுறித்து நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவில் கூறியிருப்ப தாவது:

ரஞ்சித் சின்ஹா மீதான புகார் குறித்து சர்மா குழு சமர்ப்பித்த அறிக்கை பற்றி கருத்து எதுவும் கூற விரும்பவில்லை. சின்ஹா மீதான புகார் குறித்து விசாரிக்க, சிபிஐ புதிய இயக்குநர் அலோக் வர்மா தலைமையில் குழு அமைக் கப்படுகிறது. இக்குழு சர்மா குழுவின் அறிக்கை, ஆவணங் களை ஆய்வு செய்யும். இதற்காக மேலும் 2 அதிகாரிகளை அவரே நியமித்துக் கொள்ளலாம். இது குறித்து நீதிமன்றத்துக்கு முன்கூட் டியே தகவல் தெரிவிக்க வேண்டும்.

தலைமை லஞ்ச ஒழிப்பு ஆணையரையும் விசாரணையில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக உள்ள மூத்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.சீமா மற்றும் அவரது குழுவினர், சின்ஹா மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

இந்த விசாரணையை பிற அமைப்பிடம் ஒப்படைப்பது குறித்து பரிசீலித்தோம். ஆனால், சிபிஐ-க்கு புதிய இயக்குநர் நியமிக் கப்பட்டிருப்பதால், அதன் முன்னாள் தலைவருக்கு எதிராக நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடை பெறும் என நம்புகிறோம். இந்த விசாரணையை முடிக்க எவ்வளவு காலம் தேவை என்பது குறித்து புதிய இயக்குநர் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT