இந்தியா

டெல்லி ஆளுநர் அதிகார விவகாரம்: அரசுக்கு நோட்டீஸ்

பிடிஐ

டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கே நிர்வாக அதிகாரம் இருப்பதாக ஆகஸ்ட் 4-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 6 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் என்.வி.ரமணா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணையை வரும் நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

எனினும் இந்த விவகாரம் குறித்து 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். டெல்லியை மாநிலமாக அறிவிக்கக் கோரிய மனுவை திரும்ப பெறுவதற்கும் ஆம் ஆத்மி அரசுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.

SCROLL FOR NEXT