முசாபர்நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில், கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 34 குழந்தைகள் பலியாகின. குழந்தைகள் அனைத்தும் கடும் குளிர் காரணமாக பலியானதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மேலும் ஒரு குழந்தை கடும் குளிருக்கு பலியானதாக தெரிகிறது. முசாபர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பஹாவடி கிராமத்தைச் சேர்ந்த அசான் என்ற இளம் பெண்ணின் 5 மாத கைக்குழந்தை சூர்யா வெள்ளிக் கிழமை இரவு பலியானது.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட அசான் குடும்பத்தாருடன் சாம்லி மாவட்ட நிவாரண் முகாமில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவரது 5 மாத குழந்தை நிமோனியா நோய் வாய்ப்பட்டு இறந்தது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதார அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே முகாம்களில் இருந்த 34 குழந்தைகள் குளிர் காரணமாக நோய் வாய்ப்பட்டு இறந்த நிலையில், தற்போது மேலும் ஒரு குழந்தையும் பலியானது சர்ச்சையை கிளப்பியுள்ளது.