ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோருக்கு அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது.
ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான உத்தரவுக்கு முன் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரிப்பதற்காக அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியுள்ளது.
சொத்துக்கள் பறிமுதல் உத்தரவை சில வாரங்களில் அமலாக்கப் இயக்குனரகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாறன் சகோதரர்கள் மற்றும், மலேசிய தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், மலேசியாவைச் சேர்ந்த அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் ஆகியோருடன் சன் டைரக்ட் டிவி, மேக்சிஸ் கம்யூனிகேஷன், ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க், சவுத் ஆசியா எண்டெர்ட்டெய்ன்மெண்ட் ஹோல்டிங், ஆகியோரை சிபிஐ குற்றம்சாட்டியது.
முன்னதாக, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தை நிர்ப்பந்தம் செய்து, அந்நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு கைமாறாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் பங்குதாரர்களாக உள்ள ஆஸ்ட்ரோ நெட்வொர்க் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுகுறித்து சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன், மலேசியாவைச் சேர்ந்த அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல் ஆகிய நான்கு பேர் மீதும், சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடெட், மேக்சிஸ் கம்யூனிகேஷன் பெர்ஹாட், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க், சவுத் ஏசியா என்டர்டெயின்மென்ட் ஹோல்டிங் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் 155 அரசு சாட்சிகள், 635 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பது குறித்த தீர்ப்பை சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி நேற்று அறிவித்தார். ‘இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, சாட்சிகளின் வாக்குமூலங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை படித்துப் பார்த்ததில் குற்றத்தன்மை இருப்பதற்கான முகாந்திரம் உள்ளது என்று முடிவு செய்கிறேன். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்படு கிறது’ என்று அவர் தீர்ப்பளித்தார்.
சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கே.கே.கோயல், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் சென்னையிலும், ஐந்து பேர் மலேசியா, மொரீஷியஸ், பிரிட்டனிலும் இருப்பதால் சம்மன் வழங்க கூடுதல் கால அவகாசம் தேவை’ என்று கோரினார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும் வகையில் சம்மன் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார்