கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றங்கள் உறுதியாக்கப்பட்டு திங்கள்கிழமை ஜெயிலில் அடைக்கப்பட்ட லாலு, விஐபிக்களுக்கான உயர் பிரிவு செல்லின் 'ஏ பிளாக்' -ல் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன்பாக அந்த பிளாக்கில் இருந்தவர் ஜார்கண்டின் முன்னாள் முதல்வர் மதுகோடா.
லாலு இப்போதைக்கு எம்.பி. என்பதால், குளியலறை உள்ள சிறை தரப்பட்டுள்ளது. மின்விசிறி, படிக்க செய்தித்தாள்கள் மற்றும் கொசு வலை ஆகிய வசதிகள் உண்டு. இவருக்காக சமையல் செய்ய ஒரு கைதி அமர்த்தப்பட்டுள்ளார். அவர் சமைத்த ரொட்டி, பருப்பு மற்றும் பாகற்காய் பொரியலை திங்கள் இரவு சுவைத்து சாப்பிட்டாலும், அதிகாலை 3 மணி வரை தூக்கம் வராமல் யோசனையில் மூழ்கியிருந்தாராம் லாலு.
பீர்ஸா முண்டா மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட லாலுவுக்கு வாசலில் இருந்த காவலர்கள் முதல், சிறை அதிகாரிகள் வரை ஏக மரியாதை அளித்தனராம். இது போன்ற சமயங்களில் பதில் வணக்கத்தை உற்சாகத்துடன் அளித்து வந்தவருக்கு சற்று 'மூட்' இல்லாமல் இருந்தது.
சிறைச்சாலைக்குள் நுழைந்தவுடன் மருத்துவ பரிசோதனை முடித்தவருக்கு, கொடுக்கப்பட்ட கைதி எண் 3312. வழக்கமாக இதை கைதியின் குர்தா பைஜாமா உடையில் பதிக்கும் முறை இன்று சினிமாக்களில் மட்டுமே உள்ளது.
இதிலிருந்து வழக்கமாக தப்பிக்க வேண்டி அரசியல்வாதிகளுக்கு வரும் நெஞ்சுவலி லாலுவுக்கு வராதது கண்டு பலரும் ஆச்சரியப்பட்டனர்.
இதே வழக்கில் அவருடன் குற்றம் நிரூபிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா, உடல்நிலை சரியில்லாமல் ராஞ்சியின் ராஜேந்திர பிரசாத் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.